
புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., ராகுல், நேரு குடும்பத்தில் பிறந்தவரா என எனக்குச் சந்தேகமாக உள்ளது. அவரது டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும் எனக் கேரளாவில் இடது சாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ பி.வி.அன்வர் சர்ச்சை கருத்தைத் தெரிவித்தார்.
கேரளாவில் மொத்தமுள்ள 20 லோக்சபா தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப்.,26) ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனையடுத்து இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பா.ஜ., ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மா.கம்யூ., – காங்கிரஸ் கட்சிகள் கேரளாவில் தனித்தே போட்டியிடுகின்றன. குறிப்பாகக் காங்., எம்.பி., ராகுலை எதிர்த்து வயநாடு தொகுதியில் மா.கம்யூ., பொதுச்செயலாளர் டி.ராஜா மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார்.
இப்படி தேசிய அளவில் ஒரே கூட்டணியில் இருந்தும், கேரளாவில் எதிரும் புதிருமாக இருக்கும் இந்தக் கட்சிகள், மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் பிரசாரத்தில் பேசிய ராகுல், ”முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகப் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளபோது, மத்திய விசாரணை அமைப்புகள் அவரை ஏன் விட்டு வைத்திருக்கிறது?” என விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், பினராயி விஜயன் இருக்கும் இடது சாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ. பி.வி.அன்வர், ராகுலை கடுமையாகச் சாடியுள்ளார். அதில் அவர், ”காந்தி பெயரைப் பயன்படுத்த ராகுலுக்கு உரிமை இல்லை. அவர் இரண்டாம் தரக் குடிமகன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் நேரு குடும்பத்தில் பிறந்தவரா என எனக்குச் சந்தேகமாக உள்ளது. அவரது டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று சர்ச்சை கருத்தைத் தெரிவித்துள்ளார்.

