
முசிறி அருகே துலையாநத்தம் அரசு ஆதிதிராவிட நல பள்ளியில் வகுப்பைப் புறக்கணித்து மாணவர்களுடன் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, துலையாநத்தத்தில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்புவரை உள்ளது. 26 மாணவர்கள், 27 மாணவிகள் உள்ளிட்ட 53 பேர் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை கமலம், ஆசிரியை தேவதா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
60 மாணவர்கள் இருந்தால் மூன்று ஆசிரியர்கள் அதற்குக் குறைந்தால் இரண்டு ஆசிரியர்கள் என்ற கணக்கில் இப்பள்ளியில் பணிபுரிந்த சுபஸ்ரீ ஆசிரியை பணி மாறுதலில் சென்றுள்ளார். இதன் காரணமாக மாணவர்கள் சரியாகப் படிக்க முடிவதில்லையெனக் கிராம பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குப் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று பள்ளியைப் புறக்கணித்துப் பெற்றோர்களுடன் சேர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.இதுகுறித்து தகவல் அறிந்த துறையூர் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் பழனிவேல், வட்டார கல்வி அலுவலர் ஆனந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர் பழனிசாமி மற்றும் ஜெம்புநாதபுரம் காவல் உதவி ஆய்வாளர் தண்டபாணி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்களின் கோரிக்கைகுறித்து உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு களைந்து சென்றனர்.


