Thanumalayan Temple: இந்திரன் தனது சாபம் நீங்க பூஜித்து வணங்கிய ஆலயம்!

Advertisements

இந்திரன் தனது சாபம் நீங்க பூஜித்து வணங்கிய ஆலயம்! சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில்.

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒருசேர அருள்பாலிக்கிறார்கள். அதனால்தான் தாணுமாலயன் கோவில் (தாணு என்றால் சிவன், மால் என்றால் திருமால், அயன் என்றால் பிரம்மா) என்ற பெயருடன் இந்த கோவில் அழைக்கப்படுகிறது.

Advertisements

இந்திரன் சாபம் நீங்கியது:

இந்திரன் தனது சாபம் நீங்க மும்மூர்த்திகளையும் ஒருசேர பூஜித்து வணங்கிய இடமே (அறிவுக்கானகம் என்று போற்றப்பட்ட ஞானாரண்யம் என்ற பகுதிதான்) சுசீந்திரம் என்பது புராண வரலாறு. அதனால் இந்திரன் இந்த கோவிலுக்கு அர்த்தசாமத்தில் வந்து பூஜை செய்வதாக ஐதீகம். அத்திரி மகரிஷி முனிவருக்கும், அவரது மனைவி அனுசூயாவிற்கும் மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் இங்கு காட்சி அளித்ததாக தல வரலாறு கூறுகிறது.


இறைவன் மீது அளவற்ற பற்றுக்கொண்ட அறம்வளர்த்தாள் என்ற பெண்ணை இறைவன் உயிரோடு ஆட்கொண்ட இடம் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் என்றும் தலப்புராணம் கூறுகிறது. அதன்காரணமாக அறம்வளர்த்த நாயகி அம்மன் சன்னதி அமைந்துள்ளது என்றும், இந்த சம்பவத்தின் நினைவாக ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா நடைபெறுகிறது என்றும் கூறுகிறார்கள்.

சன்னதிகள்:

இந்த கோவிலின் பிரதான சன்னதியாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் இணைந்த தாணுமாலய சாமி சன்னதி அமைந்துள்ளது. இதுதவிர கொன்றையடி சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, அறம் வளர்த்த நாயகி சன்னதி, கால பைரவர் சன்னதி, கங்காளநாதர் சன்னதி, கைலாசநாதர் சன்னதி, சேரவாதல் சாஸ்தா சன்னதி, ராமர் சன்னதி, முருகன் சன்னதி, பஞ்சபாண்டவர் சன்னதி, நீலகண்ட விநாயகர் சன்னதி, நவக்கிரக சன்னதி அமைந்துள்ளது), இந்திர விநாயகர் சன்னதி, உதயமார்த்தாண்ட விநாயகர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி, ஸ்ரீகிருஷ்ணர் சன்னதி, துர்க்கை அம்மன் சன்னதி, ஸ்ரீசக்கரம் சன்னதி, விக்னேஸ்வரி (பெண் கணபதி- முகம் விநாயகர் உருவிலும், உடல் பெண் தோற்றத்திலும் காட்சி தரும்) சன்னதி, மன்னருக்கு தலைவலியை போக்கிய ஜூர தேவமூர்த்தி சன்னதி (3 தலை, 3 கால், 4 கைகளைக் கொண்ட சாமி சிலையுடன் கூடியது), நந்தீஸ்வர் சன்னதி போன்ற சன்னதிகள் இக்கோவிலில் அமைந்துள்ளன.

இத்தகைய சிறப்புகள் மிகுந்த இந்த கோவிலுக்கு தினமும் குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாவட்ட, வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும், பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

பழம்பெருமை மிக்க இந்த கோவிலில் அமைந்துள்ள விஷ்ணு சிலை கடுசர்க்கரை மருந்தால் ஆனது. இதனால் விஷ்ணுவின் திருமேனி எப்போதும் வெள்ளி கவசம் தாங்கி இருக்கும். எனவே விஷ்ணுவுக்கு அபிஷேகம் கிடையாது. இதனால் அவர் அலங்காரப்பிரியராகவும், சிவன் அபிஷேகப் பிரியராகவும் இங்கு காட்சி தருகின்றனர். இங்குள்ள உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ நாட்களில் மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

ராஜகோபுரம்:

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலின் முகப்பில் உள்ள ராஜ கோபுரம் 135 அடி உயரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறது. கோபுரம் 10 அடி உயர கருங்கல் பீடத்தில் 7 நிலைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் உள்புறத்தில் மர வேலைப்பாடுகள் நிறைந்துள்ளது. உட்புற சுவர்களில் மூலிகைச் சாற்றில் இருந்து எடுக்கப்பட்ட வண்ணங்களில் ஆன ராமாயணம், மகாபாரத இதிகாச ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

வெளிப்புறத்தில் ராமாயணம், மகாபாரதம், சிவபுராண கதாபாத்திரங்களின் சுதை சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் கடுசர்க்கரை, நவபாஷாண மூலிகைகளால் தயாரிக்கப்பட்டதாகும். கோவிலில் உள்ள நந்தி சிலை முழுக்க, முழுக்க கடற்சங்கை மாவாக்கி அதில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை மாக்காளை என்றும், பிரமாண்டமாக காட்சி தருவதால் மகாக்காளை என்றும் அழைக்கப்படுகிறது.


ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 22 அடி உயரம் ஆஞ்சநேயரின் சிலையுடன் கூடிய சன்னதி இந்த கோவிலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். சிலை பாதத்தின் கீழே உள்ள 4 அடி பூமிக்குள் பதித்து வைக்கப்பட்டுள்ளது. வெளியில் தெரிவது 18 அடி உயரங்கொண்ட ஆஞ்சநேயர் மட்டும்தான். பாதத்தில் இருந்து உச்சிவரை எந்தவித பிடிப்பும் இல்லாமல் இந்த சிலை நிற்கிறது. சுசீந்திரம் கோவிலில் மண்ணிலிருந்து கிடைத்த மாணிக்கமாக திகழ்கிறார் மாருதி.

கோவிலின் தின வழிபாடுகளிலும், காணிக்கை வசூலிலும் இந்த கோவிலில் முதலிடம் வகிப்பவர் இவரே என கோவில் பணியாளர்கள் பெருமையோடு கூறுகிறார்கள். கோவிலின் அலங்கார மண்டபத்தில் 36 இசைத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லும் கவிபாடும் என்பதற்கேற்ப இந்த தூண்களை தட்டினால் இசை ஒலி எழும்பும். கை தாளத்துக்கு ஏற்ப நாதஓசை எழும்பும் வகையில் இசைத்தூண்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற வியக்க வைக்கும் சுற்றுப்பிரகார மண்டபத்தைக் கொண்டது இக்கோவில். 2 பெரிய கொடிமரங்கள் இந்த கோவிலில் அமைந்துள்ளன.


மார்கழி திருவிழா தேரோட்டம், சித்திரை திருவிழா தெப்போற்சவம், ஆவணி மாத தேர்திருவிழா, மாசித்திருக்கல்யாண திருவிழா, மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அமாவாசை திதியில் வரும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா ஆகியவை இந்த கோவிலின் முக்கிய விழாக்களாகும். இந்த விழாக்காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். கோவிலில் தினமும் காலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு மற்ற சன்னதிகளும், 1 மணிக்கு ஆஞ்சநேயர் சன்னதியும் நடை அடைக்கப்படும். மாலை 4 மணிக்கு ஆஞ்சநேயர் சன்னதி நடைதிறக்கப்படும். மற்ற சன்னதிகள் மாலை 5 மணிக்கு திறக்கப்படும். இரவு 8 மணிக்கு அனைத்து சன்னதிகளும் நடை அடைக்கப்படும்.காலை, மாலை 6.30 மணிக்கு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *