
சென்னை:
சென்னை கொளத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த தவெக நிர்வாகி நரேஷ் குமாரின் உடலைப் பார்த்து நடிகர் தாடி பாலாஜி கண்கலங்கி அழுதது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. இந்த நரேஷ் குமார் யார்? எப்படி இறந்தார்? என்பது பற்றிய உருக்கமான தகவல்கள்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி உள்ளார். 2026ம் ஆண்டில் தமிழகத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலில் விஜயின் கட்சி களமிறங்குகிறது.
தற்போது நடிகர் விஜய் கட்சியைப் பலப்படுத்தும் பணியிலும், நிர்வாகிகள் நியமன பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
நடிகர் விஜயின் தவெகவில் திரை பிரலங்கள், ரசிகர்கள் இணைந்து வருகின்றனர். நடிகர் தாடி பாலாஜியும் தவெகவில் சேர்ந்து செயல்பட்டு வருகிறார்.
சினிமாவில் நடிகர் விஜயுடன், தாடி பாலாஜி பல படங்களில் சேர்ந்து நடித்து இருந்தார். இருவருக்கும் இடையே நல்ல உறவுள்ள நிலையில் நடிகர் விஜய் கட்சியில் தாடி பாலாஜி இணைந்துள்ளார்.
அதோடு நடிகர் விஜய் கட்சியை விமர்சிக்கும் நபருக்கும் தாடி பாலாஜி பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தான் தாடி பாலாஜி கொளத்தூர் தனியார் மருத்துவமனை அருகே செல்லும் சாலையில் நின்று கண்கலங்கிய வீடியோ வெளியாகி உள்ளது.
அதாவது சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் குமார். இவர் இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நரேஷ் குமார், நடிகர் விஜயின் தீவிர ரசிகர். விஜயின் மக்கள் இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டு வந்தார்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியதும் தவெகவில் இணைந்தார். சென்னை கிழக்கு மாவட்ட தவெகவில் மாதவரம் பகுதி மாணவரணி தலைவராக நரேஷ் குமார் செயல்பட்டு வந்தார்.
சமீபத்தில் அவருக்கு உடல்நல பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொளத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மர்ம காய்ச்சல் மற்றும் நுரையீரலில் நீர் கோர்த்து இருந்ததால் நரேஷ் குமார் இறந்ததாக மருத்துவமனை சார்பில் குடும்பத்தினரிடம் கூறப்பட்டது.
இறந்த நரேஷ் குமாருக்கும், நடிகர் தாடி பாலாஜிக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. இதனால் நரேஷ் குமார் இறப்பு செய்தி கேட்டதும் தாடி பாலாஜி தனியார் மருத்துவமனை நோக்கி வந்தார்.
அப்போது நரேஷ் குமாரின் உடல் வைக்கப்பட்டு இருந்த ஆம்புலன்ஸ் சாலையில் நின்றது. இதையடுத்து தாடி பாலாஜி ஆம்புலன்ஸில் இருந்த நரேஷ் குமாரின் உடலுக்கு மாலை அணிவித்ததோடு, அவரது உடலைப் பார்த்துக் கண்கலங்கினார்.
சில வினாடிகள் உடலைப் பார்த்துக் கண்கலங்கிய அவர் அங்கிருந்து சென்றார். இதுபற்றி அவர், ‛‛மாதவரம், அம்பத்தூர், ஆவடி, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் தவெகவை வளர்க்க நரேஷ் குமார் பாடுபட்டார்” என்று கலங்கியபடி கூறினார்.
