
டெல்லி:
இன்போசிஸ் இணை நிறுவனரான சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன் உள்பட 18 பேர்மீது எஸ்சி / எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள ஐஐஎஸ்சியில் பணியாற்றிய பேராசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூர் சதாசிவ் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸ் உள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்திற்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன.
பல ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்கள் இங்குப் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் இணை நிறுவனராக இருப்பவர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன்… இவர்மீது எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சதாஷிவ நகர் காவல் நிலையத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிட்டி சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இன்போசிஸ் இணை நிறுவனர் கிரிஷ் கோபால கிருஷ்ணன் மற்றும் ஐஐஎஸ்சி இயக்குனர் பல்ரம் உள்பட 16 பேருக்கு எதிராக எஸ்சி/எஸ்டி வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழங்குடியின இனமான போவி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஐஐஎஸ்சியில் பேராசிரியராக இருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டில், வழக்கு ஒன்றில் தவறாகச் சிக்க வைக்கப்பட்டதாகவும் அதன்பிறகு பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் புகாரளித்து இருந்தார்.
மேலும், தன்னை சாதிய ரீதியாகத் திட்டியும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் தான், கோவிந்த ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியர், சந்தியா விஷ்வஸ்ரையா, ஹரி கேவிஎஸ் தாசப்பா, பல்ராம், பி ஹமலதா மிஷி, சோட்டபடையா கே, பிரதீப் டி சவகர், மனோகரன் ஆகியோர் மீதும் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குப் பதிவு தொடர்பாக ஐஐஎஸ்சி தரப்பிலோ, இன்போஸிஸ் இணை நிறுவனர் கிரிஷ் கோபால கிருஷ்ணன் தரப்பிலோ எந்த ஒரு கருத்தும் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.
இன்போசிஸ் இணை நிறுவனராகக் கோபாலகிருஷ்ணன், இன்போசிஸ் நிறுவனத்தின் துணை தலைவராக 2011- 2014 ஆம் ஆண்டுவரை பதவி வகித்தார்.
அதேபோல, இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் மேலாண்மை இயக்குனராகவும் 2007 – 2011 ஆம் ஆண்டுவரை இருந்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டில் இவருக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருதும் வழங்கியுள்ளது. ஐஐடி சென்னையில் இயற்பியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ்சில் முதுகலை பட்டம் படித்துள்ளார்.
