
வழக்கமாக பதவி, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சிதான் பல தந்திரங்களை செய்யும். திடீரென்று கூட்டணியை கவிழ்க்கும் செயல்களில் ஈடுபடும். அப்படிப்பட்ட பாரதிய ஜனதா கட்சிக்கே கூட்டணி மாறி அதிர்ச்சி கொடுத்துள்ளது ஒரு கட்சி. அது எந்த கட்சி என இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
மகராஸ்டிரத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். பாரதியஜனதா கட்சி இந்த மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுடன் ‘மகாயுதி’ என்ற பெயரில் பெரிய கூட்டணியை அமைத்துள்ளது. இதனால், ஏக்நாத் ஷிண்டே மகராஸ்டிரத்தில் துணை முதல்வர் பதவியில் உள்ளார்.
இந்த நிலையில், மகாராஸ்டிரத்தில் மாநகராட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மகாயுதி கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார நகரமான மும்பையை மகாயுதி கூட்டணி கைப்பற்றியது. மும்பையில் 227 வார்டுகள் உள்ளன.
பெரும்பான்மைக்கு 114 இடங்கள் போதுமானது. பாரதிய ஜனதா கட்சி 89 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. ஷிண்டேவின் சிவசேனா 29 வார்டுகளை கைப்பற்றியது. இதனால், மொத்தம் 118 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மும்பை மாநகராட்சியை கைப்பற்றியது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் ராஜ் தாக்கரேவின் மகாரஸ்டிர நவநிர்மாண் சேனா கூட்டணி மொத்தம் 78 வார்டுளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
இதனால், கடந்த 28 வருடங்களாக தாக்கரே குடும்பத்தின் சிவசேனா கையில் இருந்த மும்பை மாகராட்சி முதன் முறையாக பாஜக கூட்டணி பக்கம் வந்துள்ளது. மும்பை மேயர் பதவி என்பது மிகவும் கவுரவமானது. இதனால், மேயர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
மும்பையில் 29 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ள ஷிண்டேவின் சேனா தங்கள் கட்சிக்கு மேயர் பதவியை கேட்பதால் பாரதிய ஜனதா கூட்டணியில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால், பாரதிய ஜனதா கட்சி தங்கள் கவுன்சிலர்களை பேரம் பேசி வாங்கி விடுமென்ற பயமும் ஷிண்டேவுக்கு ஏற்பட்டது. தொடர்ந்து, தங்கள் கட்சியைச் சேர்ந்த அனைத்து கவுன்சிலர்களையும் பாந்திராவிலுள்ள தாஜ் என்ட் லேண்ட் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மொத்தமாக தங்க வைத்துள்ளார். மாற்று கட்சியினர் தொடர்பு கொள்ள முடியாதபடி, ஷிண்டே கட்சி கவுன்சிலர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஹோட்டலில் புதிய கவுன்சிலர்களுக்கு நமது கூவத்தூர் பாணியில் கவனிப்பு பலமாக இருக்கிறதாம். குதிரை பேரத்தை தடுக்கவே ஏக்நாத் ஷிண்டே கூவத்தூர் பாணியை பின்பற்றுவதாக சொல்கிறார்கள். மும்பை மேயர் பதவிக்கு மட்டுமல்லல… கே. டி. எம்.சி. என்று அழைக்கப்படும் புறநகர மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றவும் இரு கட்சிகளும் முட்டி மோதிக் கொண்டுள்ளன.
மும்பை புறநகர பகுதியில் கல்யாண் மற்றும் டோம்பிலி பகுதிகள் உள்ளன. நமது தாம்பரம் போல இந்த மாநகராட்சியும் மும்பையில் மிக முக்கியமானது. இதனை கல்யாண் டோம்பிவி மாநகராட்சி என்று சொல்வார்கள். சுருக்கமாக கே.டி.எம்.சி என்று அழைப்பார்கள். இங்கு நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் மகாயுதி கூட்டணி அபார வெற்றி பெற்றது. இங்குள்ள 122 வார்டுகளில் பாரதிய ஜனதா 50 வார்டுகளையும் அதன் கூட்டணி கட்சியான ஷிண்டேவின் சேனா 53 வார்டுகளையும் கைப்பற்றின.
இந்த மாநகராட்சியில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 11 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சி 5 வார்டுகளிலும் பெற்றி பெற்றுள்ளன. இங்கு, பெரும்பான்மை பெற 62 இடங்கள் தேவை. கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இது சிவசேனாவின் கோட்டையாகும். இங்கு சிவசேனா தனி மெஜாரிட்டியை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
மும்பை போலவே கல்யாண் டோம்பிவிலி மாநராட்சியிலும் பாரதிய ஜனதா கட்சிய மேயர் பதவியை ஷிண்டேவுக்கு விட்டு கொடுக்க விரும்பவில்லை. இதனால், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கவுன்சிலர்களை பேரம் பேசி வாங்கி பாரதிய ஜனதா கட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கிறது. அல்லது இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டு காலம் மேயர் பதவியில் இருக்கலாம் என்று பாரதிய ஜனதா ஆலோசனை கூறுகிறது. ஆனால், இதனை ஏக்நாத் ஷிண்டே ஏற்கவில்லை.
இதனால் , பாரதிய ஜனதா கட்சியை கை கழுவ ஷிண்டே முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பாரதிய ஜனதாவுக்கு பதில் தாக்கரே குடும்ப கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கல்யாண் – டோம்பிவிலி மேயர் பதவியை கைப்பற்ற முடிவு செய்துள்ளார்.இது தொடர்பாக கொங்கண் பவனில் நடந்த ஏக்நாத் ஷிண்டேவின்வின் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தாக்கரே குடும்ப கட்சி கூட்டணியுடன் கல்யாண் – டோம்பிவிலி மாநகராட்சியில் மேயர் பதவியை பெற திட்டமிட்டுள்ளதாக ஏக்நாத் ஷிண்டேவின் மகனும் எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
ஷிண்டேவின் இந்த திடீர் முடிவு பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மகாராஸ்டிரத்தில் கூட்டணியாக ஆட்சியிலுள்ள நிலையில், ஒரு மாகராட்சி மேயர் பதவிக்காக இரு கட்சிகளும் முட்டி மோதிக் கொள்வதும் ஆச்சரியத்தை அளிக்கிறது. அரசியலில் எப்போதும் எது வேண்டுமென்றாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மகாராஸ்டிர அரசியலை வைத்து உறுதியாக சொல்லலாம்.
கடந்த டிசம்பர் மாதத்தில் மகராஸ்டிரத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. மும்பையின் மற்றொரு புறநகர் பகுதி அம்பர்நாத் நகராட்சியில் பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அகோலா நகராட்சியில் பாரதிய ஜனதா கட்சி அசாசுதீன் உவேசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. அதாவது , மாநில தலைமையின் அனுமதி இல்லாமல் உள்ளுக்குள் அவர்களே கூட்டணி அமைத்துக் கொண்டனர்.
பாஜக லோக்கல் தலைவர்களின் செயல்பாட்டுக்கு மகாராஸ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடுமையாக எச்சரித்தார். அம்பர்நாத் பகுதி காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரதீபா பாட்டிலின் பதவியை காங்கிரஸ் கட்சி பறித்தது. அம்பர்நாத் மாநகராட்சியில் 12 காங்கிரஸ் கவுன்சிலர்களையும் சஸ்பெண்ட் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.



