Tenkasi:ஓட, ஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை!

Advertisements

கனகராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி:தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த ஊத்துமலை அருகே உள்ள கீழக்கலங்கல் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் கனகராஜ் (வயது 26). கூலித்தொழிலாளியான இவர் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு நேற்று இரவு வீட்டின் முற்றத்தில் அமர்ந்து இருந்தார்.

அப்போது வீட்டின் பின்புறம் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் மர்மகும்பல் வந்தது. அதைப் பார்த்த கனகராஜ் அங்கிருந்து ஓடினார். எனினும் அவரை ஓட, ஓட விரட்டிய அந்தக் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

அவரது சத்தம் கேட்டு அவரது தந்தை நடராஜன் வெளியே ஓடிவந்தார். அவரையும் அந்தக் கும்பல் வெட்டியது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மகும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. அரிவாள் வெட்டு விழுந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். நடராஜன் படுகாயங்களுடன் கிடந்தார்.

இதுகுறித்து உடனடியாக ஊத்துமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனகராஜ் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகச் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த நடராஜனும் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக இந்தக் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இந்தப் பயங்கர கொலைகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற மர்ம கும்பலை வலைவீசித் தேடிவருகிறார்கள்.

ஊத்துமலை அருகே இரவில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *