
சிக்கன் கைமா பெப்பர் ப்ரை!
வார விடுமுறை நாட்களில் நீங்கள் எப்போதும் வித்தியாசமான ரெசிபிக்களை செய்து சாப்பிட விரும்புபவர்கள் இந்த வாரம் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்து கொடுங்கள். அது தான் சிக்கன் கைமா பெப்பர் ப்ரை. இந்த சிக்கன் கைமா பெப்பர் ப்ரை சளி பிடித்திருக்கும் போது சாப்பிட்டால், சளி முழுவதும் கரைந்து வெளியேறும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
தேவையான பொருட்கள்:

சிக்கன் கைமா – 500 கிராம்.
இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
உப்பு – 1/2 டீஸ்பூன்.
கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
சீரகம் – 1/2 டீஸ்பூன்.
முட்டை – 1 பிற பொருட்கள்…
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
சோம்பு – 1/4 டீஸ்பூன்.
கறிவேப்பிலை – சிறிது.
வரமிளகாய் – 10 (விதைகளை நீக்கியது)
வெஙகாயம் – 1 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
உப்பு – 1/2 டீஸ்பூன்.
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்.
சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்.
மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்.
கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கைமாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு நன்கு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இட்லி பாத்திரத்தில் உருட்டிய உருண்டைகளை வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து, சிறிது உப்பு தூவி சில நிமிடங்கள் மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கியதும், மஞ்சள் தூள் சேர்த்து சில நொடிகள் கிளறி விட வேண்டும். அடுத்து வேக வைத்துள்ள கைமா உருண்டைகளை சேர்த்து, அத்துடன் சீரகத் தூள், மிளகுத் தூள் சேர்த்து சில நிமிடங்கள் கிளறி, கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான சிக்கன் கைமா பெப்பர் ப்ரை தயார்.


