செங்கல்பட்டு வேதாச்சலம் நகரில் செயல்படும் டாஸ்மாக் கடையில் கடந்த 9-ம் தேதி மது வாங்க வந்த ஒருவர், பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாக புகார் தெரிவித்து, தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.
அப்போது, அங்கிருந்த காவல் உதவி காவல் ஆய்வாளர் ராஜா, அந்த நபரைத் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட, அது வைரலானது.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஆட்சியாளர்கள் தவறு செய்தால், தண்டனை மக்களுக்கு. அமைச்சர் மாறினாலும் அவலம்மாறவில்லை” என்று பதிவிட்டிருந்தார். காவல் உதவி ஆய்வாளரின் செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.
இதற்கிடையில், பாமக தலைவர் அன்புமணி தனது ட்விட்டர் பதிவில், மதுக்கடையில் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டியவரை செங்கல்பட்டு நகர காவல் நிலைய எஸ்.ஐ. ராஜா, கண்மூடித்தனமாகத் தாக்கும்காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்ட ஒருவரை காவல் துறையினர் தாக்குவது கண்டிக்கத்தக்கது. இது மதுக் கடைகளின் கட்டணக் கொள்ளைக்கு துணைபோகும் செயலாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், காவல் உதவி ஆய்வாளர் ராஜாவை ஆயுதப் படைக்கு மாற்றி, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. சாய் பிரனீத் உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதேபோல, கூடுதலாக ரூ.10 வாங்கிய ஊழியர் ரத்தினவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேற்பார்வையாளர் பிரபாகரன் வேறு கடைக்கு கடைக்கு மாற்றப்பட்டுள்ளார்.