
கிராமங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 9, 2025 அன்று, தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் சங்கம் சார்பில், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக் கோரி அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கிராமப்புறங்களில் வீடு தோறும் குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைக் காவலர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் சுழற்சி முறையில் கட்டாய விடுப்பு வழங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.தூய்மைக் காவலர்கள் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை எடுக்கலாம். ஒரு வாரத்தில் ஒரு நாளுக்கு மேல் கூடுதலாக விடுமுறை எடுத்தால், ஒரு நாள் ஊதியமாக ரூ.160 பிடித்தம் செய்யப்படும்.
“ஊராட்சிகளில் வீடு தோறும் குப்பைகளை சேகரம் செய்வதற்காக வெளிநிரவல் முறையில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் (VPRC) அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் (PLF) மூலமாக தூய்மை காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இது தொடர்பாக, கீழ்கண்டவாறு தெளிவுரை வழங்கப்படுகிறது. தூய்மை காவலர்கள் சுழற்சி முறையில் வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு துய்க்கலாம். இதற்கு மேல் கூடுதலாக விடுப்பு துய்க்கப்படின் அவர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.160 பிடித்தம் செய்யப்பட வேண்டும்.” என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


