
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை முதல் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையை பொறுத்தவரையில், நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், இன்று முதல் 28-ஆம் தேதி வரை, தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என, வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.



