
தாம்பரம்: குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் நண்பர்கள் அறப்பணி மன்றம் ஏற்பாடு செய்த “போதை இல்லாத தமிழகம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 5000 பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது.
மன்றத்தின் தலைவர் டாக்டர் அரவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைத்தார்.
பங்கேற்றவர்கள் குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகிலிருந்து தொடங்கி, சுமார் 5 கி.மீ. தூரம் சென்று மீண்டும் குரோம்பேட்டை பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர். போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு ஊக்கத் தொகையுடன் கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
