முதலமைச்சரின் தனி அலுவலராக ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் நியமனம்.!

Advertisements

தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பிரிவு தனி அலுவலராக அவரது ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். யார் இவர் என்பதை தற்போது பார்க்கலாம்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ள நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் நடிகர் விஜய், முதலமைச்சரான முதல் நாளில்  200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்கள் பாதுகாப்பு, பொதைப் பொருட்கள் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை விஜய்  வெளியிட்டார்.

பதவியேற்ற பிறகு தலைமைச்செயலகம் சென்ற  முதலமைச்சர் விஜய் முக்கிய கோப்புகளை பார்வையிட்டு அரசு அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவுகளை வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து முதலமைச்சர் விஜய் தனது முதன்மைச் செயலாளராக மூத்த  ஐ.ஏ.எஸ் அதிகாரி பி. செந்தில்குமாரையும், முதலமைச்சரின் இரண்டாவது செயலாளராக  ஜி. லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸும் நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து  முக்கிய அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் அரசியல் பிரிவு தனி அலுவலராக  ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  இவருக்கான பணிகள் என்ன  என்பது  தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தமிழக அரசு அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே யார் இந்த ரிக்கி ராதன் பண்டிட் என்ற ஆவல்  அவரது கட்சியினரிடம் மட்டுமல்லாது மாற்றுக் கட்சியினர் மற்றும் பொது மக்களிடத்தில் உருவாகி உள்ளது.    ராதன் பண்டிட்டைப் பொறுத்தவரை  தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான ஜோதிடர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

வேத ஜோதிடம், எண் கணிதம் மற்றும் தியான அடிப்படையிலான வழிகாட்டுதலில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவராக உள்ளார்.முன்னாள் முதலமைச்சர்  மறைந்த ஜெ. ஜெயலலிதாவுக்கு ஆன்மீக வழிகாட்டியாக ராதன் பண்டிட் இருந்நதாக கூறப்படுகிறது. 1991-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரிய அளவில் வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைக்கும் என இவர் கணித்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் 1994ஆம் ஆண்டு அரசியலில் ஒரு மோசமான காலகட்டம் ஜெயலலிதாவிற்கு தொடங்கும் என்று ராதன் பண்டிட் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.  இதனையடுத்து தொழில் ரீதியாக 2008-ல்  ராதன் பண்டிட் டெல்லிக்குக் குடிபெயர்ந்துள்ளார்.  முன்னதாக  பண்டிட் வெற்றிவேல் என்ற பெயரில் அழைக்கப்பட்டவர் தனது பெயரை ரிக்கி ராதன் பண்டிட் என்று மாற்றிக்கொண்டார்.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்யின் தீவிர ஆதரவாளராக இருந்த அவரை அந்த கட்சியின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராவார் என்று ரிக்கி ராதன் பண்டிட்  கணித்ததை யாரும் நம்பவில்லை.  விஜய்யின் ஜாதகம் அசாதாரணமான வலிமை கொண்டதாகவும், “சுனாமி போன்ற” வலிமை  அவரது ஜாதகத்துக்கு இருப்பதாகவும்  இவர் ஜோசியம்  சொன்னது சமூக வலைதளங்களில் வைரலானது.

இவர் சொன்னவை அனைத்தும் வெற்றிகரமாகவும், தனக்குச் சாதகமாகவும் அமைந்த காரணத்தால்  ஜோதிடர்  ரிக்கியை தனக்கு நெருக்கமாக்கிக் கொண்டார். நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தின் போது விஜய்  காரின் பின்னிருக்கையில் அமர்ந்தபடி  ஆலோசனை கொடுத்துக் கொண்டிருந்ததை  பல பத்திரிகைகள் படங்களுடன் வெளிப்படுத்தின. இதுமட்டுமல்ல, விஜய்க்கு ஆதரவாக ஊடகங்களில் பேட்டிகளையும் அ வர் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சர் விஜய், தனது  அரசியல் பிரிவு தனி அலுவலராக  ரிக்கி ராதன் பண்டிட்  வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அரசியல் ஆலோசகர்கள் முதலமைச்சருக்குப் பலர் இருந்தாலும் தனி அலுவலராக ஒரு ஜோசியரை விஜய் நியமித்துள்ளது விவாதப் பொருளாகி உள்ளது.

பெரியாரையும், அம்பேத்கர், காமராஜர் போன்ற தலைவர்களை தனது கொள்கை வழிகாட்டியாக அறிவித்திருக்கும் விஜய், அதற்கு நேர் எதிரான சனாதனத் தன்மை கொண்ட நபரை தனது அரசியல் ஆலோசகராக நியமித்திருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. அரசியல் அதிகாரத்துக்கு வருவோர்கள் சாமியார்களையும் ஜோதிடர்களையும் ஆலோசகர்களாக வைத்திருப்பது கடந்த கால  இந்திய அரசியலில் பார்த்திருக்கிறோம்.

1980 களில் சர்வதேச ஆயுத சப்ளை கும்பலுடன் தொடர்பில் இருந்த சாமியார் சந்திரா சாமி,  இந்திய அரசியல்வாதிகளுக்கு ஆலோசனை அளித்து அதிகார மையத்தை  ஆட்டிப் படைத்ததை  நாம் எளிதில் மறந்துவிட முடியாது.இதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கேரள நம்பூதிரிகள்  சொன்னபடி தனது அரசியல் நகர்வுகளை அமைப்பார்  என கேள்விப்பட்டிருக்கிறோம்.

தமிழக அரசியல்வாதிகள் மட்டுமல்ல, வட இந்திய அரசியல்வாதிகளும் சாமியார்களிடத்திலும், ஜோதிடர்களிடத்திலும் ஆலோசனை பெற்று வருகின்றனர். ஆனால்,  முதலமைச்சர் விஜய், ஜோதிடர் ஒருவரை அரசியல் ஆலோசகராக நியமித்ததோடு அவரை தன் அருகிலேயே வைத்திருப்பது  பேசு பொருளாகி உள்ளது.

ரஷ்யாவில்  ஜார் ஆட்சியை ஆட்டிப்படைத்த ஜோதிடரும் சாமியாருமான  ரஸ்புடீன்  மாதிரி இந்த ஆட்சியில் ஜோதிடர்  ரிக்கி ராதன்  அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் அளவுக்குச் சென்று விடக்கூடாது என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கவலையாக  உள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *