Advertisements

கடல்கோளுக்கு முன்னால் தமிழ்நாடும் இலங்கையும் ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்கும் என்று புவியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அடுத்தடுத்த கடற்கோள்களில் இடைப்பட்ட நிலம் கடலால் விழுங்கப்பட்டதாலேயே இலங்கை தனி நிலப்பரப்பானதாகவும் கூறுகின்றனர். ஒரே நிலமாக இருந்து தனியாகப் பிரிந்துபோனதாகக் கூறப்படும் இந்தக் கருதுகோளை மெய்ப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள தீவுகளும் மணல் திட்டுக்களும் உள்ளன. தமிழ்நாட்டுப் பெருநிலமாம் மண்டபத்தின் இருந்து பாம்பன் தீவு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பாம்பன் தீவின் மேற்கு விளிம்பில் பாம்பனும் வடகிழக்கில் இராமேசுவரமும், கிழக்குக் கோடியில் தனுஷ்கோடியும் உள்ளன. வில்லின் முனைபோல அந்த நிலப்பரப்புக் காட்சியளிப்பதால் தனுஷ்கோடி என்று அழைக்கப்படுகிறது. தனுஷ் எனப்படும் சமஸ்கிருதச் சொல்லுக்கு வில் என்பது பொருள். தனுஷ்கோடி அரிச்சல்முனை என்றும் அழைக்கப்படுகிறது. நீண்டிருந்த முனை கொஞ்சங்கொஞ்சமாக அரிக்கப்பட்டு வருவதற்குச் சான்றாக அந்தப் பெயர் விளங்குகிறது.
தமிழ்நாட்டுக்குப் பாம்பன் தீவு உள்ளதைப் போல் இலங்கைக்குத் தலைமன்னார் விளங்குகிறது. சங்கக் காலத்தில் இருந்தே தமிழ்நாட்டின் பரப்பைச் சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆண்டுவந்துள்ளனர். இவர்கள் அவ்வப்போது இலங்கையின் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றியுள்ளனர். அதனால் தமிழ்நாட்டின் மேலாதிக்கத்தில் இலங்கை இருந்து வந்துள்ளது தெரிகிறது. தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் நெடுங்காலத் தொடர்பு இருந்ததை அதன் மொழியும் பண்பாடும் நாகரிகமும் ஊர்ப்பெயர்களும் இயற்கை அமைப்பும், பயிர்களும் தாவரங்களும் மெய்ப்பிக்கின்றன. திருநெல்வேலியில் தாமிரபரணி ஆறு பாய்வதைப் போல இலங்கையிலும் ஒரு தாமிரபரணி ஆறு பாய்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஊர்ப் பெயர் திருநெல்வேலி. இது தவிர நாகர்கோவில், கோவன்குளம் எனத் தமிழ்நாட்டில் உள்ள பெயர்கள் இலங்கையில் நிறைய உள்ளன.
திருநெல்வேலியில் உள்ள மொழிவழக்குக்கும் யாழ்ப்பாணத்தின் மொழிவழக்குக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. பூட்டன், பூட்டி, பாட்டன், பாட்டி, அம்மை, அப்பன், தமக்கை, தமையன், மாமன் என முறைப் பெயர்களைப் பெயர்களாகவே கூறுவதும், அழைக்கும்போது மட்டும் அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, மாமா என விளிப்பெயர்களாக அழைப்பதும் இவ்விரு மண்டலங்களின் தனிச்சிறப்பாகும். ஈழம் என்றாலே நாற்புறமும் நீரால் சூழப்பட்ட நிலப்பரப்பு என்று பொருளாகும். ஆதலால் இலங்கையும் ஈழமும் ஒன்றுதான். ஈழம் என்ற பெயரைப் பிரிவினைக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியதில்லை. பண்டைக்காலத்தில் இருந்தே இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே வணிகத் தொடர்பு இருந்து வந்துள்ளது.
ஆங்கிலேயர் காலம் வரை நீடித்த அந்த உறவு விடுதலைக்குப் பின் சுருங்கிப் போய் இப்போது மிகவும் குறைந்து விட்டது.
ஆங்கிலேயர் காலத்தில் கடவுச்சீட்டு, விசா இல்லாமல் தமிழ்நாட்டினர் இலங்கைக்குச் சென்று வரலாம். சென்னை, நாகப்பட்டினம், தனுஷ்கோடி, தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் இருந்து இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து இருந்தது. இவ்வழியாகவே இலங்கைக்கு வணிகர்களும் தொழிலாளர்களும் சென்று வந்தனர். இந்நிலையில் புதிய பாலம் கட்டுவதற்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டைப் பாதை கொண்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு பாதையில் பணி முடிக்கப்பட்டு அதைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.
அந்தத் தடத்தில் ரயிலில் செல்லும்போது எடுக்கப்பட்ட ஒரு நிமிட வீடியோவைத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
Advertisements


