டிரம்ப் – எலான் மஸ்க்கிற்கு எதிராக அமெரிக்கா முழுவதும் வெடித்த போராட்டம்!

Advertisements

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்கிற்கு எதிராக அமெரிக்கா முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  நாடு முழுவதும் Hands off என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மக்கள் பிரமாண்ட  பேரணி நடத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை  அந்நாட்டு மக்களுக்கு எதிராகவும்  அமெரிக்காவில் தங்கியுள்ள பல  வெளிநாட்டு மக்களுக்கு எதிராகவும்  பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.  குறிப்பாக அரசு ஊழியர்களின் ஊதியத்தை குறைப்பது, சில துறைகளை கலைப்பது என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி அதிபர் டொனால்டு  டிரம்ப் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு அதிகப்படியான வரி விதிப்பை அறிவித்தார். அமெரிக்கா மீது மற்ற நாடுகள் விதிக்கும் வரிக்கு பதிலடியாக இந்த வரி உயர்வு அமல்படுத்தப்படுவதாக விளக்கம் அளித்த அதிபர் டொனால்டு  டிரம்ப், இந்தியாவுக்கும் 26 சதவீத வரி விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

டிரம்பின் இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த வரி விதிப்பை தொடர்ந்து பங்குச் சந்தைகளும் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் டொனால்டு டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்கை கண்டித்து அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. அமெரிக்காவில் 50 க்கும் மேற்பட்ட மாகாணங்களின் தலைநகரங்களில் பொதுமக்கள் ஹேண்ட்ஸ் ஆப் என்ற பதாகைகளுடன் பிரம்மாண்ட பேரணியை நடத்தியுள்ளார். நாடு முழுவதும் உள்ள மாநில தலைநகரங்கள், கூட்டாட்சி கட்டிடங்கள், காங்கிரஸ் அலுவலகங்கள், சமூகப் பாதுகாப்புத் துறையின் தலைமையகங்கள், பூங்காக்கள் மற்றும் நகர அரங்குகள் என 1,400 க்கும் மேற்பட்ட இடங்களில் “கைவிடுங்கள்!” என்ற பதாகைகளை ஏந்திய படி பெரும்  கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.  அரசு நிர்வாகம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

அமெரிக்க அரசு நிர்வாகத்தில் கோடீஸ்வரர்களின் தலையீடு, டிரம்ப் நிர்வாகத்தின் ஊழலை முடிவுக்குக் கொண்டுவருதல், மருத்துவ உதவி, சமூகப் பாதுகாப்பு மற்றும் உழைக்கும் மக்கள் நம்பியுள்ள பிற திட்டங்களுக்கான கூட்டாட்சி நிதியைக் குறைப்பதை முடிவுக்குக் கொண்டுவருதல், மற்றும் புலம்பெயர்ந்தோர், திருநங்கைகள் மற்றும் பிற சமூக மக்கள்  மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.மேலும்  எலான் மஸ்க்கின் ஆட்டத்தையும்  செயல்பாட்டையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்று முழுவதுமாக 3 மாதம் கூட நிறைவடையாத நிலையில் அவரது ஆட்சிக்கு எதிராக இப்படி ஒரு பிரம்மாண்ட போராட்டம் நடப்பது  அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *