
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 30ஆம் நாள் தொடங்கியது. சனிக்கிழமை வரை 234 தொகுதிகளிலும் மூவாயிரத்து 430 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைகிறது. மற்ற கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் முன்கூட்டி வெளியானதால் அவர்கள் முன்கூட்டி வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டுப் பரப்புரையையும் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரிக்கும் பணியையும் தொடங்கிவிட்டனர். காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் பட்டியல் கடைசியாக வெளியான நிலையில் அவர்கள் இன்று தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதேபோல் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி இன்று வேட்பு மனுவைத் தேர்தல் நடத்தும் அலுவர் நடராஜிடம் தாக்கல் செய்தார். முதன்முறையாக 1989 ஆண்டுத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினரான எடப்பாடி பழனிச்சாமி 1996, 2006 ஆகிய தேர்தல்களில் தோல்வி கண்டுள்ளார். 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
இவை தவிர மற்ற அனைத்து முறையும் வெற்றி பெற்றுள்ளார்.



