Tamil Nadu Transport Association: போக்குவரத்துத்துறை கடும் எச்சரிக்கை!

பணிமனைகள், பஸ் நிலையங்களை முற்றுகையிட தொழிற்சங்கத்தினர் திட்டமிட்டுள்ள நிலையில், போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை: 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இதனிடையே இன்று(ஜன.,10) காலை 7 மணி நிலவரப்படி 98.87 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான, 15வது ஊதிய ஒப்பந்த பேச்சை உடனே துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திச் சி.ஐ.டி.யு., -ஏ.ஐ.டி.யு.சி., – அ.தொ.பே., உள்ளிட்ட 24 தொழிற்சங்கங்கள் நேற்று ( ஜன.,09) வேலைநிறுத்தத்தை துவக்கின.

பல்வேறு மாவட்டங்களில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.இதனிடையே இரண்டாவது நாளான இன்றும் போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டம் நீடிக்கிறது. அவர்களின் போராட்டமும் தொடர்கிறது.

அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், இன்று காலை 7 மணி நிலவரப்படி 97.87 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம் உள்ள 13,782 பஸ்களில் 13,489 பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையில் 3,092 பஸ்களில் 3,020(97.67 சதவீதம்) பஸ்கள் ஓடுகின்றன. அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 100 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழுப்புரத்தில் 99.10, சேலத்தில் 97.61, கோவையில் 95.56, கும்பகோணத்தில் 97.56, மதுரையில் 98.71, நெல்லையில் 99.28, தேனியில் 99.22 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்கள், ஊழியர்கள்குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. மாவட்ட வாரியாகவும், போக்குவரத்து கோட்டம் வாரியாகவும் விவரங்களைச் சேகரிக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் பஸ் இயக்கத்தைத் தடை செய்யும் வகையில் முற்றுகையிடவோ சிறைபிடிக்கவோ முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிற்சங்கங்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறினால் எந்தப் பாரபட்சமுமின்றி துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிமனைகள், பஸ் நிலையங்களை முற்றுகையிட தொழிற்சங்கத்தினர் திட்டமிட்டுள்ள நிலையில், போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *