
நிர்வாகம் தெரியாத திமுக அரசால் வருவாய்ப் பற்றாக்குறையில் இரண்டாமிடத்தில் உள்ள தமிழ்நாடு உத்தரப்பிரதேசத்தை விட 26 இடங்கள் பின் தங்கியுள்ளதாகப் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரி ஈட்டியிருப்பதாக இந்தியத் தலைமைக் கணக்காயர் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு காலத்தில் பின்தங்கிய மாநிலமாகப் பார்க்கப்பட்ட உத்தரப் பிரதேசம் வருவாய் உபரியில் முதலிடம் பிடித்துள்ளதாகவும், திமுக நிதி நிர்வாகத்தில் தமிழ்நாட்டை 27ஆவது இடத்துக்குத் தள்ளியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்கள் வாங்கும் கடனில் பெரும்பகுதியைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தச்
செலவிடுவதற்குப் பதிலாக ஊதியம், மானியம் ஆகியவற்றுக்குச் செலவிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசு கடன்வாங்கித் தான் அதன் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம் 37 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் உபரியை ஈட்டியுள்ளதாகவும், அதேநேரத்தில் ஆந்திரத்துக்கு அடுத்தபடியாக வருவாய்ப் பற்றாக்குறை அதிகமுள்ள மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.



