T. Natarajan: அஜித்துடன் பிறந்தநாளை கொண்டாடிய கிரிக்கெட் வீரர் நடராஜன்!

தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், ஐதராபாத்தில் நடிகர் அஜித்குமாருடன் தன்னுடைய பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடி இருக்கிறார்.

சேலம் அருகே சின்னப்பம்பட்டி என்கிற கிரமாத்தை சேர்ந்தவர் நட்ராஜன். இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன், தமிழ்நாடு பிரீமியர் லீக் மூலம் வெளிச்சத்துக்கு வந்து தற்போது ஐபிஎல்லில் கலக்கி வருகிறார். ஐபிஎல் தொடரில் கலாநிதி மாறனின் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார் நடராஜன்.

யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் ஆன இவர் பல்வேறு போட்டிகளை அந்த அணிக்காக ஜெயிக்க வைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகக் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த நடராஜன், இந்த ஆண்டு ஐபிஎல்லில் கம்பேக் கொடுத்துச் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்தச் சீசனில் இதுவரை சன்ரைசர்ஸ் ஆடிய மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே நடராஜன் களமிறக்கப்பட்டார். அதிலும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்தச் சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பலம் வாய்ந்த பேட்டிங்குடன் மிரட்டி வருகிறது. அந்த அணி கடந்த வாரம் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 277 ரன்களை விளாசியது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மேலும் அந்தப் போட்டியில் வெற்றியும் பெற்றது. இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி உடனான போட்டியில் தோல்வியைச் சந்தித்த ஐதராபாத் அணி, அடுத்ததாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டி நாளை ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. அப்போட்டிக்காகச் சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில், சன் ரைசர்ஸ் அணி வீரர் நடராஜன் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.

நடராஜனின் இந்தப் பிறந்தநாளை மறக்க முடியாத பிறந்தநாளாக மாற்றி இருக்கிறார் அஜித். சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கி இருந்த அதே ஓட்டலில் நடிகர் அஜித்தும் தங்கி இருந்த நிலையில், அவர் நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். அப்போது கேட் வெட்டி அஜித்துக்கு நடராஜன் ஊட்டிவிட்ட போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடராஜனின் இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனும் கலந்துகொண்டார். அப்போது அவரும் நடிகர் அஜித்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். நடிகர் அஜித், நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *