
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள மதுபான பார் ஒன்றில் ஏற்பட்ட மோதலின் உச்சகட்டமாக, இருசக்கர வாகனம் மீது காரை ஏற்றி இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேட்டில் உள்ள பாரில் நேற்று இரவு இருதரப்பினர் மது அருந்திவிட்டு நடனமாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைக்கலப்பாக மாறியுள்ளது. பாரில் தொடங்கிய இந்த மோதல் வெளியேயும் நீடித்தது.
மோதலில் ஈடுபட்ட ஒரு தரப்பினர், தங்களது காரை எடுத்துக்கொண்டு எதிர்தரப்பினர் சென்ற இருசக்கர வாகனத்தை நோக்கமாகக் கொண்டு அதிவேகமாக மோதியுள்ளனர். இந்த விபரீத சம்பவத்தில், பைக்கில் பயணித்த இலங்கைத் தமிழ் பெண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரில் மொத்தம் 6 பேர் இருந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இச்சம்பவத்தை கொலை வழக்காகப் பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை நடத்தி முதற்கட்டமாக பாலகுரு என்ற இளைஞரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், காரில் இருந்த மற்ற நபர்கள் யார் என்பது குறித்தும், தப்பியோடிய மீதமுள்ள கும்பலையும் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். பாரில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.



