ஒரு புறாவுக்கு அக்கப்போரா என இம்சை அரசன் 24ஆம் புலிகேசி புலம்பிய கதையாகி இருக்கிறது, அமைச்சர் ராஜ்மோகன் கையில் கட்டியிருந்த ஒரு கடிகாரத்தின் விலை விவகாரம்.
அப்படி என்னப்பா அந்த கைக்கடிகாரம்னு தெரிஞ்சிக்கிட ஆசையா… வாங்க ஜெம் தொலைக்காட்சியோட செய்தித் தொகுப்புக்குள்ள போவோம்…
செய்தி சேகரிப்பு, நிகழ்ச்சித் தொகுப்பு என ஊடகத் துறையில் இயங்கி, தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ‘தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடக வெளிச்சத்துக்கு வந்தவர் தான் ராஜ்மோகன்.
அந்தப் புகழின் வெளிச்சத்தில், அவர் நடத்திய யூடியூப் சேனலில் சமூகம், அரசியல் எனப் பல்வேறு தலைப்புகளில் தனது கருத்துகளைப் பதிவு செய்ய, ராஜ்மோகன் மீதான கவனம் மேலும் அதிகரித்தது. அதன்பிறகு சினிமா பக்கம் சென்ற அவர், ஒரு திரைப்படத்தையும் இயக்கிப் பார்த்தார்.
அப்போதுதான் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினார். இதையடுத்து, தவெகவில் இணைந்த ராஜ்மோகனுக்கு, கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
தனது பேச்சுத் திறமையால் விஜயின் பாராட்டைப் பெறும் அளவுக்கு கட்சியில் முக்கியத்துவம் பெற்றார்.
அதற்குப் பரிசாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட ராஜ்மோகனுக்கு விஜய் வாய்ப்பளித்தார். தேர்தலில் 53 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆன ராஜ்மோகன், இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார்.
ராஜ்மோகன் அமைச்சரானாலும், அவரை இன்னும் பழைய மைக் பாசம் விடவில்லை. தவெக நிகழ்ச்சிகளில் மைக்கும் கையுமாகத்தான் வலம் வருகிறார்.
ஆனால், தற்போது அவரது கையில் இருக்கும் கடிகாரம்தான் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், அங்கு மத்திய கல்வி அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில், தமிழ்நாட்டிற்கு சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை நிதியை விடுவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் தமிழக அரசு முன்பு கொண்டிருந்த நிலைப்பாடே தற்போதும் தொடர்வதாகத் தெரிவித்தார். இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், கூடுதல் தகவல்களை வெளியிட முடியாது என்றும் கூறினார்.
மேலும், நவோதயா பள்ளிகள் திட்டத்துக்கும் தமிழ்நாட்டின் மாதிரிப் பள்ளிகள் திட்டத்துக்கும் பெயர்கள்தான் வேறுவேறு என்றும், இரண்டுமே ஒரே நோக்கத்தைக் கொண்டவை என்றும் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் தற்போதைய மாநில அரசு இப்போதுதான் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாகவும், அது தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் ராஜ்மோகன் மத்திய அமைச்சரைச் சந்தித்து கல்வி நிதி தொடர்பாகக் கோரிக்கை விடுத்த செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் குறித்த பதிவுகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
அமைச்சர் ராஜ்மோகன் அணிந்திருந்த கைக்கடிகாரம், ரோலக்ஸ் டேடோனா (Rolex Daytona) ரகத்தைச் சேர்ந்தது என்றும், அதன் மதிப்பு 43 லட்சம் ரூபாய் முதல் 46 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலாகின.
ஏற்கெனவே, ராஜ்மோகன் அமைச்சரானதும் 65 லட்சம் ரூபாய்க்குக் கார் வாங்கியதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடிகாரத்தை அணிந்திருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
சாதாரணப் பின்னணியிலிருந்து வந்த ஒருவர், அமைச்சராகப் பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்குள் இவ்வளவு விலை உயர்ந்த கடிகாரத்தை எப்படி வாங்க முடியும் என்றும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், ராஜ்மோகனின் கைக்கடிகாரம் குறித்த சர்ச்சைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு மறுப்பு தெரிவித்துள்ளது.
அமைச்சர் ராஜ்மோகன் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் விலை 5,798 ரூபாய் மட்டுமே எனத் தெரிவித்துள்ள தவெக உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு, இதனைத் தவறாகச் சித்தரித்து வேண்டுமென்றே பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

