Lok Sabha Election 2024: செய்தியாளரைத் தாக்கிய பாமக தொண்டர்களால் பரபரப்பு!

தர்மபுரியில் நடைபெற்ற பாமக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் செய்தியாளரைப் பாமக இளைஞர்கள் தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராகச் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். இதற்காகத் தொடர்ந்து மாவட்ட முழுக்க பல்வேறு பகுதிகளில் கூட்டணிக் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு வேட்பாளரை ஆதரித்து வேட்பாளரின் கணவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் ஆகியோர் தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது அன்புமணி பேசி முடித்தபின்பு மருத்துவர் ராமதாஸ் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது பாமக கட்சி தொண்டர்கள் குறிப்பாகப் பெண்கள் கூட்டத்திலிருந்து எழுந்து சென்றனர் இதனைக் கண்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பெண்கள் வெளியேறுவது குறித்தும் சேர்கள் காலியாக இருப்பது குறித்தும் வீடியோ பதிவு செய்து செய்தி சேகரித்துள்ளார். இதைக் கண்ட பாமக தொண்டர்கள் இது போன்ற செய்திகளை எடுக்கக் கூடாது எனத் தெரிவித்து செல்போனை பிடுங்கி அவரை மேடைக்குப் பின்புறம் தள்ளிச் சென்று தாக்க முற்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்து இளைஞர்கள் அராஜகத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. அப்போது செய்தியாளரைத் தள்ளிவிட்டுச் செய்தியாளரின் செல்போனை எம்எல்ஏ வெங்கடேஷ்வரன்  பிடுங்கி சென்றார்.

தான் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு செய்தியாளரைத் தாக்குகின்றனர் எனத் தெரிந்தும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வேலையை அவர்கள் செய்யட்டும் எனப் பேசினார். இதனைக் கேட்ட பாமக இளைஞர்கள் தலைவரே உத்தரவிட்டு உள்ளாரென நினைத்துச் செய்தியாளரை மேலும் தாக்க முற்பட்ட இந்தச் சம்பவத்தால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *