
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று மாலை மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது . சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15பேர் கொல்லப்பட்டனர், இரண்டு போலீஸ் அதிகாரிகள், பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் காயமடைந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இது.
இந்த தாக்குதல் பல மாதங்களாக திட்டமிடப்பட்டதாகவும், குழந்தைகள் விளையாட்டு மைதானத்துக்கு அருகிலுள்ள போண்டி கடற்கரை பூங்காவில் நடந்த யூத மத பண்டிகையான ஹனுக்கா நிகழ்வை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தாக்குதல் நடந்த போது, போண்டி கடற்கரையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் திரண்டிருந்தனர்.
தாக்குதல் நடத்திய ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார், மற்றொருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலத்தின் கீழ் ஒரு வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்ததால், அந்தப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்தச் சம்பவத்தில் மூன்று துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வெடிமருந்து பெல்ட்களை அணிந்திருந்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், “ இது அதிர்ச்சியூட்டும் மற்றும் துயரமளிக்கும் நிகழ்வு. பாதிக்கப்பட்டவர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளது. இதுகுறித்து காவல் ஆணையர் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பிரீமியருடன் பேசினேன். பொதுமக்கள் காவல்துறை வழிகாட்டுதலைப் பின்பற்றவேண்டும்” என்றார்
நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் கிறிஸ் மின்ஸ் தனது அறிக்கையில், “போண்டியிலிருந்து வெளிவரும் தகவல்கள் மற்றும் படங்கள் மிகுந்த துயரமளிக்கின்றன. காவல்துறை மற்றும் அவசர சேவைகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.” என்று கூறிநயுள்ளார். மேலும், இந்த சம்பவத்தின் போது, துப்பாக்கி வைத்து சுட்டுக் கொண்டிருந்த ஒருவரை அங்கிருந்த ஒருவர் பின்பக்கமாக போய் கட்டி பிடித்து , துப்பாக்கியை பறித்தவரும் அடையளம் காணப்பட்டுள்ளார்.
இவரின் பெயர் அக்மது அல் அக்மது. சுட்டுக் கொண்டிருந்தவரிடத்தில் இருந்து துப்பாக்கியை இவர் பறித்ததால், பல உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளன. தற்போது, கையில் காயத்துடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இடது கையில் குண்டு காயம் காரணமாக சிதைந்து போயுள்ளது. இதனால், அந்த கை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அக்மது அல் அக்மது நிஜ ஹீரோ என்று ஆஸ்திரேலிய மீடியாக்கள் புகழாரம் சூட்டியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப், அக்மது அல் அக்மதுவை மிகவும் துணிச்சலான மனிதர் என்று பாராட்டியுள்ளார். அக்மது அல் அக்மதுவுக்க்காக கிரவுட் ஃபண்ட் திரட்டப்பட்டது. இதுவரை, 1,80,000 அமெரிக்க டாலர்கள் திரண்டுள்ளது. சிட்னியில் அக்மது அல் அக்மது பழக்கடை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. 50 வயதான ஷாஜித் அக்ரம் அவரின் 24 வயதான நவீத் அக்ரம் ஆகியோர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில், ஷாஜித் அக்ரம் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். நவீத் அக்ரம் உயிருக்கு ஆபத்தான நிலையில் , சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்துக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. கடந்த 1998ம் ஆண்டு ஷாஜித் மாணவர் விசாவில் பாகிஸ்தானில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். பின்னர், 2001ம் ஆண்டு நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார். நவீத் அக்ரம் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்.
சிட்னியின் புறநகர் பகுதியான Bonnyrigg என்ற இடத்தில் வாடகை வீட்டில் இருவரும் வசித்துள்ளனர். இந்த வீட்டை நேற்று சிட்னி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பல வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதில், ஷாதித் அக்ரம் ஆயுதங்கள் வாங்க லைசென்ஸ் பெற்றுள்ளார். இவரின், பெயரில் 6 துப்பாக்கிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த 6 துப்பாக்கிகளையுமே போண்டி பீச் தாக்குதலுக்கு பயன்படுத்தியுள்ளனர்.
நவீத் அக்ரமின் தாயார் வீரெனாவிடத்தில் சிட்னி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ‘எனது மகன் கட்டுமான வேலைக்கு சென்று வந்தான். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வேலை இழந்தான். எனது மகனுக்கு எந்த கெட்டப்பழக்கமும் இருந்ததில்லை. மது, சிகரெட் என்று எந்த பழக்கமும் இல்லதவன். வேலைக்கு செல்வான், வீட்டுக்கு திரும்புவான் . எந்த சந்தேக நடவடிக்கையும் அவனிடத்தில் பார்க்க முடியாது.
நீச்சல்,ஸ்குபா டைவிங், உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவன். தனது தந்தையுடன் நீச்சலுக்கு போவதாகதான் என்னிடத்தில் கூறி சென்றான் ‘என்று போலீசாரிடத்தில் கூறியுள்ளார்.இதற்கிடையே, பானிஸ்தானில் இருந்து கடந்த 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வந்த நவீத் அக்ரம் என்ற மற்றொரு இளைஞரின் புகைப்படத்தை பலரும் தீவிரவாதி என்று கூறி, சோசியல் மீடியாவில் பரப்பி வருகின்றனர். இதையடுத்து, தற்போது நவீத் அக்ரம் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அந்த வீடியோவில் தன்னால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தனக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக மிதமான போக்குடன் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். உங்கள் நாட்டை அரித்துக் கொண்டிருக்கும் கேன்சர் செல்களை அகற்ற நீங்கள் செய்தது என்ன? என்றும் ஆஸ்திரேலிய பிரதமரிடத்தில் நெதன்யாகு கேள்வி எழுப்பியுள்ளார்.
நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆஸ்திரேலியா முழுவதுமே தீவிரவாதம் என்கிற கேன்சர் நோய் பரவி வருகிறது என்றும் நெதன்யாகு சராமரியாக குற்றம் சாட்டியிருக்கிறார்.இந்த தாக்குதலின் போது, ஒரு முஸ்லிம் மனிதர் துணிச்சலாக செயல்பட்டு தீவிரவாதியிடத்தில் இருந்து துப்பாக்கியை பறித்து துணிவுடன் செயல்பட்டார். அந்த முஸ்லிம் மனிதருக்கு எனது சல்யூட். அவரை, போன்றுதான் ஆஸ்திரேலிய பிரதமரும் நடந்திருக்க வேண்டும். தயக்கத்தையும், கோழைத்தனத்தையும் இந்த உலகம் மன்னிக்காது. துணிவையும் வீரத்தையும்தான் இந்த உலகம் போற்றும் என்றும் நெதய்யாகு கடுமையாக சாடியுள்ளார்.
கடந்த மாதம் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத் , ஆஸ்திரேலியாவில் தீவிரவாதகுழுக்கள் பரவியிருப்பதாகவும் யூத மக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் ஆஸ்திரேலிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும், ஆஸ்திரேலிய போலீசார் இந்த விஷயத்தில் கோட்டை விட்டு விட்டனர். போண்டி பீச் தாக்குதலுக்கு ஆஸ்திரேலிய வாழ் பாகிஸ்தானிய நல அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



