
திருச்செந்தூா் முருகன் கோவிலில் கந்தசஷ்டியையொட்டி இன்று மாலை சூரசம்காரம் நடைபெறுவதால் அங்கு இலட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா்.
திருச்செந்தூா் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 22ஆம் நாள் யாகசாலைப் பூஜைகளுடன் தொடங்கியது. விழா நாட்களில் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டுப் பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முதன்மையான நிகழ்வான சூரசம்காரம் இன்று நடைபெறுகிறது. கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூபத் தரிசனமும் அதைத் தொடா்ந்து மற்ற பூஜைகளும் நடைபெற்றன.
கந்தசஷ்டி விழாவையொட்டித் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நோன்பிருந்த இட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனா். இதனால், கோவில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளது.
பாதுகாப்புப் பணியில் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட நாலாயிரம் காவல்துறையினர், ஊா்க்காவல் படையினா், கடலோரக் காவல் படையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். முதன்மையான இடங்களில் கேமராக்கள் பொருத்தியும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சூரசம்கார விழா ஏற்பாடுகளைக் கோவில் தக்காா் அருள்முருகன், இணை ஆணையா் ராமு, கோவில் பணியாளா்கள் செய்துள்ளனா். திருச்செந்தூா் கோவிலில் மலேசியா, இலங்கை, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சோ்ந்த பக்தா்கள் ஒன்று சோ்ந்து ஆறு நாட்கள் நோன்பிருந்து வருகின்றனா்.
ராஜபாளையத்தைச் சோ்ந்த பரமானந்தம் பிள்ளை குழுவினா் 65ஆவது ஆண்டாக இந்த ஆண்டு கோவிலில் சிவன், பாா்வதி, விநாயகா் என சுவாமி வேடங்களிட்டுப் பஜனை பாடித் தரிசனம் செய்தனா். வண்ண மின் விளக்குகளால் ராஜகோபுரமும், கோவில் வளாகமும் ஜொலித்திருந்தது.

