சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய்மாரடைப்பால் காலமானார்.
கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் மாரடைப்பால் காலமானார்.
புதுடெல்லி: சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. இதுபற்றிச் சஹாரா இந்தியா பரிவார் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சுப்ரதா ராய் பல்வேறு உடல்நல கோளாறுகளால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 12-ந்தேதி அவருடைய உடல்நலம் மோசமடைந்தது.
இதனால், கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அவருக்கு, உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு உள்பட பல பாதிப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு நேற்றிரவு 10.30 மணியளவில் காலமானாரெனத் தெரிவித்து உள்ளது.
அவரது மறைவு, சஹாரா இந்தியா அமைப்பினருக்கு ஆழ்ந்த வருத்தம் ஏற்படுத்தி உள்ளது. ஒரு வழிகாட்டிச் சக்தியாக, தலைவராக மற்றும் அவருடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் ஊக்கம் அளித்தவராக இருந்தவர் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. அவருடைய இறுதி சடங்குகள்பற்றிய விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.