காரின் பின் பக்க டயர் வெடித்து மின் கம்பத்தின் மீது மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பழனி: திருச்சி காஜாமலை தெருவைச் சேர்ந்த நண்பர்கள் 5 பேர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலம் கொச்சினுக்கு காரில் சுற்றுலா சென்றனர். தங்களது பயணத்தை முடித்து விட்டு மீண்டும் திருச்சிக்கு வந்து கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை பழனி அருகே உள்ள சத்திரப்பட்டி-வேலூர் 4 வழிச்சாலையில் கார் வந்து கொண்டு இருந்தது. திடீரென எதிர்பாராதவிதமாகக் காரின் பின் பக்க டயர் வெடித்தது.
இதில் கார் நிலைதடுமாறி அருகே இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. இதில் காரின் பின் பக்கம் அமர்ந்திருந்த திருச்சி காஜாமலை 2-வது தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கலைச்செல்வன் (வயது 27), திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் கோபிநாதன் (27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரில் வந்த அமீர்பாட்ஷா (26), அகமது அப்துல்லா (28), ஜோயல் (27) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் அங்கு வந்த போலீசார் காயமடைந்த 3 பேரையும் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
மேலும் உயிரிழந்த 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.