முதல்வர் ஸ்டாலின் பேச்சால் கொந்தளித்த அதிமுக!

Advertisements

சென்னை:

பெண்களுக்கு எதிரான ஆட்சியை நடத்திய “சாருங்க” எல்லாம் பேட்ச் குத்திக்கிட்டு வந்து அமர்ந்திருக்காங்க என அதிமுக எம்.எல்.ஏக்களை தாக்கிச் சட்டசபையில் இன்று பேசியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் பகுதியில் சாலையோரம் பிரியாணி கடை வைத்திருந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்தப் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசையும், காவல்துறையையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் செல்போனில் பேசியபோது “சார்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாரெனப் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் தெரிவித்ததாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, யார் அந்த சார்? எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது முதலே அதிமுக உறுப்பினர்கள் தங்கள் கறுப்புச் சட்டைகளில், “யார் அந்த சார்?” என்ற பேட்ச்சை அணிந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3வது நாளான இன்று, அண்ணா பாலியல் வன்கொடுமை விவகாரம்குறித்து எதிர்க்கட்சிகள் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விவாதம் நடைபெற்றது.

கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் பேரவையில் ஒவ்வொருவரும் பேசினர். அதற்குப் பதில் அளித்துத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார்.

அப்போது அதிமுக எம்.எல்.ஏக்களை சாடிப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாதது போல எதிர்கட்சியினர் பேசி வருகிறார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் திமுக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும்.

பெண்கள் அதிகம் வேலைக்குச் செல்லும் மாநிலம் தமிழ்நாடு தான். வன்கொடுமை வழக்கில் வேடிக்கை பார்ப்பதில்லை. இது மக்கள் மத்தியில் எடுபடாது. அரசைப் பாராட்ட மனமில்லை என்றாலும் கூட வீண்பழி சுமத்த வேண்டாம்.

கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்பதை நினைத்துப் பாருங்கள்? தொடர்ச்சியாகப் பல பெண்களுக்கு இரண்டு வருடமாக நடந்தது. அப்போது அதிமுக ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரயில் முன் தள்ளிச் சத்யா என்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை வாங்கித் தந்தது இந்தத் திமுக அரசு.

மனசாட்சியின்றி பெண்களின் பாதுகாவலர்கள்போல் பேசுகிறவர்கள் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என நினைத்துப் பாருங்கள். அந்தச் சம்பவத்தில் அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிபிஐ விசாரணைக்குப் பிறகே அந்த விவகாரத்தில் பல உண்மைகள் வெளியாகின. அந்தச் சம்பவத்தில் தொடர்ச்சியாகப் பல பெண்களுக்கு 2 ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை நடந்தது.

பாலியல் தொல்லை, ஆபாச வீடியோ தொடர்பாகப் புகார் அளித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதுதான் அன்றைய முதல்வர் சார் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு லட்சணம். மீண்டும் மீண்டும் சொல்கிறேன், பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அதிமுக பிரமுகர்கள் தான். பொல்லாத ஆட்சிக்குப் பொள்ளாச்சியே சாட்சி.

எதிர்க்கட்சித் தலைவர் தனது பொறுப்பை மறந்து பேட்ச் அணிந்து வந்தார். பொள்ளாச்சி சம்பவம் முழுவதுமே அ.தி.மு.க.வினர் சம்பந்தப்பட்டது. இப்படி பெண்களுக்கு எதிரான ஆட்சியை நடத்திய சாருங்க எல்லாம் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து வந்து உட்காருகிறார்கள். இதுபோல அதிமுக ஆட்சியின் 100 சார் குறித்து நான் கேள்வி கேட்க முடியும். ” எனப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

பொள்ளாச்சி வழக்குகுறித்து பேசும்போது, ‘சார் ஆட்சி’ என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *