
விளம்பரங்களுக்குப் பல நூறு கோடி ரூபாய் செலவு செய்யும் திமுக அரசு, விவசாயிகளின் நலனைக் காக்கும் கட்டளைக் கால்வாய் சீரமைப்புத் திட்டத்தை மட்டும் செயல்படுத்தாமல் நிதிப் பற்றாக்குறை என முதலைக் கண்ணீர் வடிப்பதாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதிக்கு நினைவிடமும் பேனா சிலையும் கட்டுவதற்கும், சென்னையில் கார் ரேஸ் நடத்துவதற்கும் நிதி இருக்கும்போது, கட்டளைக் கால்வாய் சீரமைப்புத் திட்டத்துக்கு நிதி இல்லையா? என வினவியுள்ளார்.
சீரமைப்புத் திட்டத்தைக் கைவிட்டதால் கால்வாயில் மண்டிக் கிடக்கும் புதர்களால் அடைப்பு ஏற்பட்டுத் தண்ணீர் வராமல் பயிர்கள் வாடி வதங்கும் நிலை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளைக் கண்டுகொள்ளாமல், மேடைகளில் மட்டும் நானும் டெல்டாக்காரன்தான் என்று முழங்கும் ஸ்டாலின் ஆட்சியை வரும் சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகள் விரட்டியடிப்பர் என்றும் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


