தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை, ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான நிறைவு விழாவும், பரசளிப்பு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பையையும் பதக்கத்தையும் வழங்கினார்.
இதையடுத்து அவர், விழாவில் பேசிய போது, விளையாட்டை வளர்க்க, திறமையான வீரர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க, 37 கோடி ரூபாய் பரிசுத் தொகையுடன் முதல்வர் கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டன என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர், விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
பின்னர், முதல்வர் கோப்பைக்கான போட்டியில் சென்னை முதலிடமும், செங்கல்பட்டு இரண்டாமிடமும், கோவை மூன்றாமிடமும் பெற்றன. இந்நிகழ்வில், துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா, விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.


