
தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில்கள் ஜூலை 1 முதல் பயணிகள் ரயில்களுக்கான எண்களைக் கொண்டு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டின்போது நிறுத்தப்பட்ட இந்த ரயில் சேவை, பின்னர் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் எனும் பெயரில் இயக்கப்பட்டு வந்தது. இதனால் குறைந்தப்பட்ச கட்டணம் ரூ.10-லிருந்து ரூ.30ஆக உயர்த்தப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரோனா கட்டுப்பாட்டுக்கு முன்பு வசூலித்த பழைய கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த முன்பதிவில்லா சிறப்பு ரயில்களுக்கான எண்கள் வழக்கமான பயணிகள் ரயில்களுக்கான எண்களாக மாற்றப்பட்ட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவிலிருந்து அனைத்து கோட்டப் பொதுமேலாளருக்கும் சுற்றறிக்கை வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில்: கொரோனா பரவலுக்கு பின்பு அனைத்து பயணிகள் ரயிலும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்களாக மாற்றி இயக்கப்பட்டன. இந்த ரயில்களின் எண்களும் ‘0’ வில் ஆரம்பிக்கும் வகையில் மாற்றப்பட்டன.
இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் இயங்கும் அனைத்து முன்பதிவில்லா ரயில்களின் எண்களையும் மாற்றி மீண்டும் பழைய எண்களை அறிவிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் இயங்கும் 288 பயணிகள் ரயில்கள் மற்றும் 8 மலைப்பாதை ரயில்களின் எண்கள் ஜூலை 1ம் தேதி முதல் பழைய எண்களைக் கொண்டு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
