Breaking: கழிவறை வழியாகப் பரவிய விஷ வாயு; ஒரே குடும்பத்தில் 3 பெண்கள் பலி – இருவர் கவலைக்கிடம்!

Advertisements

புதுச்சேரியில் பாதாள சாக்கடை மூலமாக வீட்டு கழிவறையில் ஏற்பட்ட விஷவாயு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மாநிலம், ரெட்டியார்பாளையம் பகுதியில் கழிவறைக்குச் சென்ற மூதாட்டி செந்தாமரை (வயது 72) திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரைக் தூக்குவதற்காகச் சென்ற அவரது மகள் காமாட்சியும், மயங்கி விழ இதனைக் கண்ட செந்தாமரையின் பேத்தி பாக்கியலட்சுமி தனது தாய் மற்றும் பாட்டியைத் தூக்க கழிவறைக்கு சென்றபோது அவரும் மயங்கி விழுந்துள்ளார்.

தொடர்ந்து மூன்று பேரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது செந்தாமரை மற்றும் காமாட்சி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இருவரும் விஷவாயுத்தாக்கி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், பாக்கியலட்சுமி தீவிர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். சிறிது நேரத்தில் அவரும் உயிரிழந்து உள்ளார். அதன்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்பொழுது மூன்றாக உள்ளது. மேலும் இரண்டு பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் பாதாள சாக்கடை கழிவுகள் முறையாக வெளியேறாத நிலையில் அதில் அடைப்பு ஏற்பட்டு விஷவாயு உருவாகி இருக்கலாம் என்றும், அந்த விஷ வாயுவும் வெளியேற வழி இல்லாததால் பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ள வீடுகளுக்குள் விஷ வாயு சென்று இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் விஷவாயு கசிவு உணரப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் அனைவரும் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *