Sonia Gandhi: சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்!

ராஜஸ்தானிலிருந்து காலியாகும் ராஜ்யசபா எம்.பி., பதவிக்குக் காங்., மூத்த தலைவர் சோனியா போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

புதுடில்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான விரைவில் வெளியாக உள்ள நிலையில் தேசிய அரசியல் களம் இப்போதே சூடுபிடித்துள்ளது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதனிடையே வரும் பிப்ரவரி 27-ம் தேதி 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்யப் பிப்ரவரி 15-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் தேர்வுகுறித்து அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவைக்கு சோனியா காந்தி தேர்வு செய்யப்படுகிறார். இவர் தற்போது உத்தர பிரதேசத்தின் ரேப்பரேலி மக்களவை தொகுதி எம்.பியாக உள்ளார்.

இன்னும் ஓரிரு மாதங்களில் (2024) லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தனது ரேபரேலி லோக்சபா தொகுதியில் போட்டியிடுவதற்கு பதிலாக மகள் பிரியங்காவுக்கு விட்டுக் கொடுக்கச் சோனியா முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ராஜஸ்தானிலிருந்து காலியாகும் பதவிக்குச் சோனியா போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக டில்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு சோனியா வந்தார். அவருடன் ராகுல், பிரியங்காவும் உடன் வந்தனர்.

தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சோனியா, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், பிரியங்கா, ராகுல் மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *