பொது வெளியில் பிணைக்கைதிகளை விடுதலை செய்தது ஹமாஸ்!

Advertisements

இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர்.

அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.

கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, மேலும் விடுவிக்கப்பட உள்ள ஒஹட் பென் அமி, இலி ஷராபி, ஆர் லிவி ஆகிய 3 பிணைக்கைதிகளின் பெயர் பட்டியலை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டது.

இதற்கு ஈடாகத் தங்கள் நாட்டு சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களில் 183 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.

இந்நிலையில், தெய்ர்-அல்-பலா நகரில் பிணைக்கைதிகளை விடுதலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்படும் இடத்திற்கு தன்னார்வல அமைப்பான ரெட் கிராஸ் அமைப்பின் மீட்பு வாகனங்கள் வந்து சேர்ந்தன.

மேலும் அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர்.

அதேசமயம், முகமூடி அணிந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினர் பலர் துப்பாக்கிகளுடன் அங்குக் கூடினர். அதன்பின், ஒரு வெள்ளை நிற வாகனத்திலிருந்து ஹமாஸ் அமைப்பினர் 3 இஸ்ரேலிய பிணைக்கைதிகளையும் அழைத்து வந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு தற்காலிக மேடையில் நிற்க வைத்தனர்.

தொடர்ந்து பிணைக்கைதிகளிடம் மைக்கை கொடுத்துப் பேசுமாறு கூறினர்.

இவ்வாறு பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் பொதுவெளியில் பேச வைத்தது இதுவே முதல் முறையாகும்.

இதைத் தொடர்ந்து 3 பிணைக்கைதிகளையும் ரெட் கிராஸ் தன்னார்வலர்களிடம் ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்தனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *