சோனம் வாங்சுக் 26 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, அவரது ஆரோக்கியம் சீரடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நாடு முழுவதும் ஏற்படக்கூடிய வன்முறையைத் தவிர்ப்பதற்காகவும், பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளையும் ஏற்று, மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் முன்னிலையில் சோனம் வாங்சுக் தனது 26 நாள் உண்ணாவிரதத்தை நள்ளிரவில் அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்ததாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து CJP கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே கூறுகையில், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் போராடிய சோனம் வாங்சுக்கின் துணிச்சலுக்கும் தியாகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாட்டிற்கு அவரது உயிர் மிகவும் விலைமதிப்பற்றது என்று தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சோனம் ஜி மருத்துவர்களின் அறிவுரைப்படி தனது அன்றாட நடைமுறைகளை பின்பற்றி, விரைவில் குணமடையவும், தங்கள் ஆரோக்கியத்திற்காகவும் தான் இறைவனை வேண்டுதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

