கரூரில் இறந்த குடும்பங்களுக்கு 20 இலட்ச ரூபாய் நிதியுதவி – விஜய் அறிவிப்பு

கரூரில் பரப்புரையின் போது நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு 20 இலட்ச ரூபாய் வழங்க இருப்பதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனமும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழலால் கண்களும் மனமும் கலங்கித் தவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உயிரனைய உறவுகளை இழந்து தவிப்போருக்குச் சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உறவினை இழந்து தவிக்கும் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் 20 இலட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு 2 இலட்ச ரூபாயும் அளிக்க எண்ணுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இழப்புக்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைவரும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். சிகிச்சை பெற்று வருவோருக்கு அனைத்து உதவிகளையும் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்றும் உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *