Advertisements

வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, நீட் தேர்வு குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வினாத்தாள் கசிவு என்பது சாதாரண பிரச்சினை அல்ல என்றும், இது லட்சக்கணக்கான மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதித்த மிகுந்த வேதனையான விஷயம் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டரை மாதங்களில் இதைத் தடுக்க பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் ஒரு கல்வியாண்டையும் இழக்கக் கூடாது என்பதால், 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான தேர்வுகளை உடனடியாக நடத்த அரசு முழு ஆற்றலுடனும் செயல்பட்டது என்று கூறினார். மேலும், வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைந்து விசாரிக்க தனி விரைவு நீதிமன்றம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகத் தெரிவித்துள்ளார். வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்களின் கருத்துகள் பெறப்பட்ட பிறகு இறுதி வடிவம் அளிக்கப்படும் என்றும், நாடாளுமன்றத்தின் இரண்டாவது வார கூட்டத்தொடர் தொடங்கும் திங்கள்கிழமை அன்று, அதற்கான மசோதாவை விரைவாக நிறைவேற்ற முயற்சிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
Advertisements


