தமிழின் செழுமையை உலகறியச் செய்தவர் நடிகர் திலகம் : முதலமைச்சர் பெருமிதம்.!

தமிழின் செழுமையையும் பெருமையையும் திரைப்படங்களின் வழியே உலகறியச் செய்து நடிப்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தனது நிகரற்ற நடிப்பாற்றலாலும், கம்பீரக் குரலாலும், திரையுலகின் இமயமாய் திகழ்ந்து, உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் பிறந்தநாளில் அவரது மகத்தான கலைப்பணியை நினைவுகூர்ந்து போற்றி வணங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

அனைத்து கதாபாத்திரங்களையும் தன் அசாத்திய நடிப்பால் நம் கண்முன்னே நிறுத்தி, தமிழின் செழுமையையும் பெருமையையும் திரைப்படங்களின் வழியே உலகறியச் செய்து நடிப்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். நடிகர் திலகத்தின் கலையுலகச் சாதனைகள் தலைமுறைகளைக் கடந்தும் தமிழ் மண்ணின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத் தளப் பதிவில்,  சிம்மக் குரலாலும் செழுந்தமிழ் உச்சரிப்பாலும் திரையுலகை ஆண்ட நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் பிறந்தநாளில் அவருடன் பழகிய அழகிய தருணங்களையும், ஈடு இணையற்ற அவரது நடிப்பாற்றலையும் நினைவுகூர்ந்து போற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது சமூக வலைத்தளப் பதிவில், சிம்மக்குரலால் செந்தமிழ்ப்பேசி அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்தவர் நடிகர் சிவாஜி கணேசன் என்று தெரிவித்துள்ளார். வணங்கும் கடவுளையும், வரலாற்று நாயகர்களையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய கலை உலகச் சிற்பி என்று புகழாரம் சூட்டியுள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளில் புகழ் வணக்கத்தைச் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *