சோளிங்கர் அடுத்த மாறன் கண்டிகையில் அரசு பஸ், கார் நேருக்கு நேர் மோதி விபத்து!பெண் உள்பட 10 பேர் படுகாயம்!

சோளிங்கர் : சோளிங்கர் அடுத்த மாறன்கண்டிகையில் அரசு பஸ், கார் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பெண் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து நேற்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் வேலூர் நோக்கி புறப்பட்டது. மாறன் கண்டிகை கூட்ரோடு அருகே உள்ள கருங்கல் மலை வளைவில் சுமார் 9.30 மணியளவில் சென்றபோது, பெங்களூருவில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த காரும் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரில் வந்த பெங்களூருவை சேர்ந்த கஜேந்தின் (34) இடிபாட்டில் சிக்கி படுகாயமடைந்தார். விபத்துக்குள்ளான பஸ் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் விவசாய நிலத்தில் இறங்கி அங்குள்ள முள்புதருக்குள் புகுந்து மரத்தில் மோதி நின்றது.இதில், பஸ்சில் பயணம் செய்த பாராஞ்சியை சேர்ந்த பரிமளா (50) படுகாயம் அடைந்தார். மேலும் 8க்கும் மேற்பட்ட பயணிகளும் லேசான காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காரில் இருந்த கஜேந்திரன், பஸ்சில் இருந்த பரிமளா உள்ளிட்டோரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பிவைத்தனர். அங்கு பரிமளா, கஜேந்திரன் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த அரக்கோணம் ஏஏஸ்பி அசோக் கிரிஷ் யாதவ், தாலுகா இன்ஸ்பெக்டர் பழனிவேல் சோளிங்கர் எஸ்ஐ மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான காரை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *