Shilpa Shetty Divorce – Raj Kundra: ஷில்பா ஷெட்டியை பிரிந்துவிட்டதாக அவரது கணவர் அறிவிப்பு!

Shilpa Shetty Divorce – Raj Kundra: பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஷில்பா ஷெட்டியும் தானும் பிரிந்துவிட்டதாக அவரது கணவர் ராஜ் குந்த்ரா கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷில்பா ஷெட்டி. இவர் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் பிரபுதேவா ஜோடியாக மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் அறிமுகமான இவர், கடைசியாக எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த குஷி திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார். அதன்பின் அவர் தமிழ் படங்களில் தலைகாட்டவில்லை.

பின்னர் பாலிவுட்டில் பிசியாக இருந்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா என்பவரைக் கடந்த 2009-ம் ஆண்டுத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நடிப்பை தாண்டி நடிகை ஷில்பா ஷெட்டி பிசினஸும் செய்துவந்தார். ஐபிஎல்லில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முதன்முதலில் வாங்கியது அவர் தான். அவர் வாங்கிய அந்த அணி முதல் சீசனிலேயே கப் ஜெயித்தது. பின்னர் சில ஆண்டுகளில் அதனை விற்றுவிட்டார்.

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, கடந்த 2021-ம் ஆண்டு ஆபாச பட வழக்கில் கைதானார். ஆபாச படங்களைத் தயாரித்து அதனை ஆன்லைனில் வெளியிட்டுச் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா சில மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அந்தச் சமயத்திலேயே ஷில்பா ஷெட்டி அவருடன் சண்டையிட்டு விவாகரத்து கேட்டதாகச் செய்திகள் வெளியானது.

ஆனால் அவர் ஜாமீனில் வெளியே வந்ததும் இருவரும் ஜோடியாக வலம் வந்து விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். ஆனால் தற்போது தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாகக் கூறி ராஜ்குந்த்ரா சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ஷில்பா ஷெட்டி உடனான விவாகரத்தை உறுதி செய்துள்ளார். ராஜ் குந்த்ராவின் இந்தப் பதிவு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் ராஜ்குந்த்ரா, ஷில்பா ஷெட்டி ஜோடியின் 14 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *