மெக்கா முதல் மத்திய கிழக்கு வரை நீளும் பதற்றம்..! அதிகரிக்கும் ராணுவச் செலவு..!

மெக்கா முதல் மத்திய கிழக்கு வரை நீளும் பதற்றம்..
ஈரான் போரால் அதிகரிக்கும் அமெரிக்காவின் ராணுவச் செலவு..

அதையும் தாண்டி, அடுத்தகட்ட மோதலுக்கான களமாக மாறுகிறதா விண்வெளி?
மத்திய கிழக்கில் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில்,, சவுதி அரேபியாவை நோக்கிய ஹவுதி தாக்குதல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதேநேரம், ஈரான் போரால் அமெரிக்க ராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள செலவு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, அடுத்தகட்ட மோதலுக்கான களமாக விண்வெளி மாறும் என்ற அச்சங்களுக்கு மத்தியில், விண்வெளியில் ஆயுதங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மெக்கா முதல் விண்வெளி வரை… உலக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி திருப்பங்கள் என்ன? பார்ப்போம்…

இஸ்லாமியர்களின் மிக முக்கிய புனித நகரமான மெக்காவைக் குறிவைத்து, ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சியைச் சவுதி அரேபிய வான் பாதுகாப்பு படை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.மெக்காவுக்குத் தெற்கே தடைசெய்யப்பட்ட வான்வெளி எல்லைக்குள் நுழைய முயன்றபோதே, ஹவுதிகளின் ட்ரோனை சவுதி ராணுவம் வான்வெளியிலேயே சுட்டு வீழ்த்தியது.

இந்தத் திடீர் தாக்குதல் முயற்சியால் மெக்கா, ஜெட்டா மற்றும் தாயிப் ஆகிய முக்கிய நகரங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Alert) விடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதினாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கான விமானப் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 57 இஸ்லாமிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ‘இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு’ (OIC), இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, “புனிதத் தலங்களின் பாதுகாப்பு எந்தச் சூழலிலும் மீறக்கூடாத எல்லை” எனக் கடுமையாக எச்சரித்துள்ளது.

இருப்பினும், மெக்காவை இலக்கு வைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஹவுதி அமைப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது. மற்றொருபுறம், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் தீவிரப் போர், அந்நாட்டின் கருவூலத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் (CBO) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, கடந்த 5 மாதப் போரில் மட்டும் அமெரிக்க ராணுவத்திற்கு சுமார் ₹3.65 லட்சம் கோடி ($43 பில்லியனுக்கும் மேல்) இழப்பு ஏற்பட்டுள்ளது.

340-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், டஜன் கணக்கிலான போர்க்கப்பல்கள் மற்றும் அதிநவீன ஏவுகணைகள் இந்தப் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரே ஒரு தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் ‘டோமாஹாக்’  ரக ஏவுகணை ஒன்றின் விலையே ₹30.6 கோடியாகும். போர் இதே வேகத்தில் நீடித்தால், அமெரிக்காவிற்கு மாதந்தோறும் கூடுதலாக ₹28,767 கோடி இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அசாத்திய ராணுவச் செலவினங்கள் காரணமாக அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்ந்து, பணவீக்கம் அதிகரித்து, சாதாரண குடும்பங்களின் வாழ்வாதாரமும் கடன் சுமையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பூமியில் நடக்கும் போர்கள் போதாதென்று, விண்வெளியையும் போர்க்களமாக மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க விண்வெளியிலேயே ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாக அமெரிக்க விண்வெளிப் படை  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்க – ஈரான் போரில், ஈரானுக்குச் சீனா தனது செயற்கைக்கோள்கள் மூலம் அமெரிக்க ராணுவத் தளங்கள் குறித்த உளவுத் தகவல்களை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இந்தச் செயற்கைக்கோள்களை முடக்குவதற்காகவே லேசர் மற்றும் ஜாமர் ஆயுதங்களை அமெரிக்கா விண்வெளியில் இறக்கியுள்ளது.

இதற்குச் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேவேளையில், அமெரிக்காவின் ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள்களைச் செயலிழக்கச் செய்யும் ‘மைக்ரோவேவ்’ ஆயுதங்களைச் சீனாவும் உருவாக்கி வருவதால், விண்வெளியிலும் ஒரு பேரழிவு ஆயுதப் போட்டி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மெக்கா முதல் மத்திய கிழக்கு வரை நீளும் பதற்றம்…
ஈரான் போரால் அதிகரிக்கும் அமெரிக்காவின் ராணுவச் செலவு…
அதையும் தாண்டி, அடுத்தகட்ட மோதலுக்கான களமாக மாறுகிறதா விண்வெளி?

ஒருபுறம் சவுதி அரேபியா–ஹவுதி மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் ஈரானுடனான போரின் தாக்கம் அமெரிக்காவின் பொருளாதாரத்திலும் ராணுவத்திலும் எதிரொலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, விண்வெளியில் ஆயுதங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருப்பது, உலக நாடுகளின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது. உலக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் இந்த அதிரடி திருப்பங்கள், அடுத்தகட்டத்தில் எந்த பாதையை நோக்கி செல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *