தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு சிக்கல்..! வேட்புமனுவில் முரண்பாடு என புகார்..

மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் தாக்கல் செய்த வேட்புமனுவில் வயது மற்றும் வருமான வரி விவரங்களில் முரண்பாடு உள்ளதாக தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மரகதம் குமரவேல் கடந்த முறை தாக்கல் செய்த வேட்புமனுவில் 44 வயது என குறிப்பிட்ட நிலையில் தற்போது 43 என குறிப்பிட்டுள்ளதாகவும், வருமான வரி விவரங்களில் ஒரே நிதி ஆண்டில் இரு வேறு தொகைகள் காட்டப்பட்டுள்ளதாகவும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்றுடன் வேட்புமனு தாக்கலும் நிறைவடைந்துள்ளது. இதில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என மொத்தம் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
திமுக சார்பில் பரந்தாமனும், அதிமுக சார்பில் கணிதா சம்பத்தும், தவெக சார்பில் கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிடு வெற்றி பெற்ற மரகதம் குமரவேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பி சுகந்தியும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமனும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தாக்கல் தாக்கல் செய்த வேட்புமனுவில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இது தொடர்பாக தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- மரகதம் குமரவேல் மற்றும் அவரது கணவரும் தாக்கல் செய்த வேட்புமனுவில் வயது மற்றும் வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்கள் முரண்பாடாக உள்ளன. கடந்த முறை தாக்கல் செய்த வேட்புமனுவிற்கும் இப்போது தாக்கல் செய்து இருக்கும் வேட்புமனுவிலும் மாற்றங்கள் இருக்கின்றன. கடந்த முறை வயது 44 என்றும் இப்போது வயது 43 என்று போட்டு இருக்கிறார்கள். வயது கூட சின்ன மிஸ்டேக் என்று எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததில் முற்றிலும் தவறான தகவலையே கொடுத்து இருக்கிறார்கள். இவங்க தான் இப்படி கொடுத்து இருக்காங்க என்று பார்த்தால் அவரது கணவரும் அப்படியே அதே தவறை தான் செய்து இருக்கிறார். ஒட்டுமொத்தமாகவே நீங்களே இணையதளத்தில் ஒப்பிட்டு பார்த்தால் வித்தியாசம் தெரியும். இவங்களோட மோட்டிவேஷனை பார்க்கும் போது வெற்றி பெற வேண்டும் என்றே தாக்கல் செய்யவில்லை.
வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கமாகவே இந்த வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். ஆளும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி செய்து இருக்கிறார்கள். இதனால் தான் தேர்தல் அலுவரிடன் இது குறித்து புகார் மனு அளித்துள்ளேன்” என்று கூறியுள்ளார். இதனால் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலின் வேட்புமனு ஏற்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டால் இது தவெக அரசுக்கு பெரும் பின்னடைவாக அமையும்.
மனுக்கள் மீதான பரிசீலனை நாளை செப்டம்பர் 17 ஆம் தேதி நடக்கிறது.
செப்டம்பர் 19 ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்.
அக்டோபர் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.
அக்டோபர் 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *