Advertisements

இளம்பெண் மரணத்தின் சந்தேகம் என கூறி 30க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல்!
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த ராஜன். இவர் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறார். இவருக்கு காக்காபாளையம் அருகே உள்ள சுந்தரி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தையும், 4 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் சுந்தரி கடந்த 18ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை கண்ட ராஜன் மற்றும் அவரது உறவினர்கள் சுந்தரியை மீட்டு இளம்பிள்ளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுந்தரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த சுந்தரியின் உறவினர்கள் அவரது சாவில் மர்மம் உள்ளதாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
மேலும் சுந்தரியின் சாவுக்கு காரணமான அவரது கணவர் ராஜா மற்றும் பெற்றோரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் இல்லை எனில் சாலை மறியலில் ஈடுபடுவோம் என கூறினர். இதனையடுத்து சுந்தரியின் கணவர் ராஜன், மாமியார் சின்னபிள்ளை, மாமனார் நடராஜன் ஆகியோரை மகுடஞ்சாவடி காவல் துறையினர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் சுந்தரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், சுந்தரி இறந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, சுந்தரியின் உறவினர்கள் 30ற்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு கலைந்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisements

