
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சொத்துத் தகராறில் நியூட்ரீசியனை அவர் மனைவியும் மகனும் கூலிப்படையை அமர்த்திக் கொன்றது தெரியவந்துள்ளது. கூலிப்படையினர் 7 பேரைக் கைது செய்துள்ள போலீசார் தலைமறைவான மனைவியையும், மகனையும் தேடி வருகின்றனர்.சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள பக்காளியூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் குண்டானவர்களின் உடல் எடையைக் குறைக்கும் நியூட்ரீசியன் சிகிச்சை அளித்து வந்தார். ராஜேந்திரனுக்கு ராணி என்கிற மனைவி உள்ளார், இவர்களுக்குக் கார்த்திகா என்ற மகளும், அரவிந்த் என்ற மகனும் உள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டால் கடந்த 30 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ராஜேந்திரன் திருச்செங்கோடு பிரிவு பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்துக் கொண்டு உடல் எடை குறைக்கும் நியூட்ரீசியன் சிகிச்சை அளித்து வந்தார். கடந்த 31ஆம் தேதி காலை ராஜேந்திரன் சிகிச்சை மையத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயில் நேரில் சென்று ஆய்வு செய்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்.சங்ககிரி காவல் துணைக் கண்காணிப்பாளர் சிந்து மேற்பார்வையில், சங்ககிரி ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர்கள் அருண்குமார், ஸ்ரீராம், கண்ணன் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
கொலை நடந்த இடத்தில் கைப்பற்றிய சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்துத் தீவிர விசாரணை நடத்தியதில் கொலையாளிகள் புதுச்சேரியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, தனிப்படை போலீசார் புதுச்சேரிக்கு விரைந்து சென்றனர். அங்குப் பதுங்கி இருந்த குற்றவாளிகளைப் புதுச்சேரிக் காவல்துறையினரின் துணையுடன் மடக்கிப் பிடித்தனர்.பிடிபட்டவர்கள், சங்ககிரி ஆர்எஸ் கரிமேட்டைச் சேர்ந்த மனோஜ்குமார், மாவலிப்பாளையம் பாலிகாட்டைச் சேர்ந்த சிவசங்கர், கஸ்தூரிபட்டியைச் சேர்ந்த சசிகுமார், கார்த்திகேயன், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த லோகபிரகாஷ், சங்ககிரி புள்ளிபாளையத்தைச் சேர்ந்த கௌதம், ரகுநாத் ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்கள் 7 பேரையும் சங்ககிரி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். இந்த வழக்கில் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ராஜேந்திரனுக்கும் அவர் மகன் அரவிந்துக்கும் சொத்துத் தகராறு இருந்தது தெரியவந்தது.
அரவிந்த் திருமணம் செய்து கொள்வதற்குப் பெண் பார்க்கும் போதெல்லாம் தந்தை வேறு வழியில் சென்று அதனைத் தடுத்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அரவிந்த் கூலிப்படையை ஏற்பாடு செய்து தந்தையைக் கொன்றதும் தெரிய வந்துள்ளது.
அரவிந்த் மனோஜ்குமாரிடம் 4 இலட்ச ரூபாய் கொடுத்துத் தந்தையைக் கொன்றுவிடச் சொன்னதாகவும், அதையடுத்து மனோஜ்குமார் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததும் தெரியவந்தது.கொலையாளிகள் 7 பேரைக் கைது செய்த காவல்துறையினர், இந்தக் கொலைக்குக் காரணமான ராஜேந்திரனின் மனைவி ராணி, அவர் மகன் அரவிந்த் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.சொத்துக்காக ஒருவரை அவர் மனைவியும், மகனுமே கூலிப்படையை ஏவிக் கொன்றது சங்ககிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



