
தூத்துக்குடி:
பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி ஐக்கிய முற்போக்கு கூட்டணியோ தாங்கள் 10 ஆண்டுகள் கழித்து நிச்சயம் தற்போது ஆட்சிக்கு வருவோம் என்கிறார்கள். பிரதமர் மோடிக்கு எதிரான பிரச்சாரங்களை தொடங்கிவிட்டார்கள். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்கிறார்கள். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிடுவதாக கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முதலே சொல்லப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா தென் சென்னை தொகுதிக்கு குறி வைத்துள்ளார்.

அத்துடன் அவர் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவதே பாஜகவின் இலக்கு என தெரிவித்திருந்தார். இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வருங்காலத்தில் தமிழரை பிரதமராக்குவோம் என உறுதியெடுப்போம் என தெரிவித்திருந்தார். மேலும் தமிழர் பிரதமராகும் வாய்ப்பு இருமுறை வந்த போதும் அதை தமிழகம் இழந்துவிட்டது. அதற்கு காரணம் திமுகதான் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பொதுவாக ஒவ்வொரு தேர்தலிலும் இரு தொகுதிகளில் போட்டியிடும் பிரதமர் மோடி இந்த முறை வடக்கில் ஒரு தொகுதி, தெற்கில் ஒரு தொகுதி என்ற வீதத்தில் ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்கிறார்கள்.
இந்த நிலையில் ராமநாதபுரம் பின்தங்கிய மாவட்டமாக இருந்து வருவதால் இங்கு பிரதமர் போட்டியிட்டால் அந்த பகுதி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாறும் என பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். மேலும் தமிழக மக்களின் எண்ணமும் மோடி தமிழகத்தில் போட்டியிடுவது என்பதுதான் என்றும் பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்புள்ளதாக தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும் அவரை திமுக அல்லது கூட்டணி கட்சி வேட்பாளர் தோற்கடிப்பார் என திமுக பிரமுகர்களும் கூட்டணி கட்சித் தலைவர்களும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானோ , பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்

