திருவனந்தபுரம், ‘உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் பத்திரிகையாளர்களின் மொபைல் போனை பறிமுதல் செய்யக்கூடாது’ என கேரள போலீசாருக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கேரள மாநிலம் பத்தணந்திட்டை மாவட்டத்தில், மங்களம் மலையாள நாளிதழின் நிருபராக விசாகன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இதே மாவட்டத்தில் ஷாஜன் என்பவர் ‘ஆன்லைன் டிவி’ நடத்தி வருகிறார்.
சமீபத்தில், இவரது சேனலில், சர்ச்சைக்குரிய மற்றும் கேரள அரசுக்கு எதிரான செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், ஷாஜனுடன் தொடர்பில் இருப்பதாக கூறி, விசாகனின் மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதை எதிர்த்து விசாகன் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், போலீசார் தன்னையும், தன் குடும்பத்தினரையும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதிபதி வி.வி. உன்னி கிருஷ்ணன் நேற்று தன் உத்தரவில் கூறியதாவது:
ஒரு பத்திரிகையாளரின் மொபைல் போனில் நிறைய தகவல்கள் வரும். இதில் எதை பிரசுரிப்பது என்பதை பத்திரிகையாளர் முடிவு செய்வார்.
ஒரு குற்றச்செயல் பற்றி கிடைத்த தகவலை வைத்துக் கொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் பத்திரிகையாளரின் மொபைல் போனை பறிமுதல் செய்ய முடியாது.
எவ்வித சூழ்நிலையில், இந்த பத்திரிகையாளரின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது என்பது பற்றி பத்தணந்திட்டை காவல் நிலைய அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.