
சென்னை:
“ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டைப் புறக்கணித்து இருக்கிற நிதி நிலை அறிக்கை காகிதங்களால் நிரம்பிய வெற்றுக்குப்பை” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
2025- 2026 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்ற முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். மேலும், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக திட்டங்களை அறிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லையென எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பட்ஜெட்டை வெற்றுக் குப்பையென விமர்சித்துள்ளார்.
சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிற 2025- 26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்திருப்பது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஆளும் பாஜக அரசு செய்திருக்கிற பச்சைத்துரோகம்.
மேலும், பாஜகவின் கூட்டணி ஆளுகிற பீகார் போன்ற மாநிலங்களுக்கு மட்டும் அதிக அளவு சிறப்புத்திட்டங்களை வாரி வழங்கியுள்ள நிதிநிலை அறிக்கை, தமிழ்நாட்டுக்கு எந்தச் சிறப்புத் திட்டத்தையும் அறிவிக்காமல் புறக்கணித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பாதுகாப்புத் துறைக்கு அதிகளவு நிதியை ஒதுக்கிவிட்டு, ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு நிதியை அதிகரிக்காமல், தவிர்த்த காரணத்தினால் தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் வாழ்கின்ற அடித்தட்டு ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார மந்த நிலையிலிருந்து நாட்டு மக்களை மீட்பதற்கான எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.
விவசாயிகள் கடன் பெறும் தொகையின் அளவு 3 லட்சத்திலிருந்து 5 இலட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது விவசாயிகளுக்குப் பலன் அளிக்கக்கூடிய செய்திபோலக் காட்சியளித்தாலும், கடன் வாங்கித்தான் விவசாயம் செய்ய வேண்டிய நிலையில் இன்றும் விவசாயிகள் இருக்கிறார்கள் என்கிற நிலை நாட்டிற்கே பெரும் அவமானமாகும்.
மேலும், பெரும் இழப்பில் இயங்கி வரும் வேளாண்மைத் துறையை முன்னேற்றுவதற்கான சிறப்புத்திட்டங்கள், விவசாயிகளை முன்னேற்றுவதற்கான அறிவிப்புகள் என எதுவும் நிதிநிலை அறிக்கையில் இல்லை.
மின்சார வாகனங்கள் மற்றும் அலைபேசிகளில் பயன்படுத்துவதற்கான லித்தியம் பேட்டரிகள் மீதான வரிகள் குறைக்கப்பட்டு இருப்பது ஆறுதலாக இருந்தாலும், இன்று கடுமையான விலைவாசி ஏற்றத்தால் மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்ற நிலையில், விலைவாசி ஏற்றத்திற்கு காரணமான பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான வரிகள் குறைக்கப்படாமல் இருப்பது விலைவாசி ஏற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும் அநியாயச் செயலாகும்.
மேலும், வறுமை கோரப்பிடிக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் நடுத்தர மக்களுக்குப் பயன்படுகிற எந்த ஒரு நல்ல திட்டத்தையும் நிதிநிலை அறிக்கையில் காண முடியவில்லை.
மாநிலத்தின் கடன் வாங்கும் உரிமைகளைக் கட்டுப்படுத்த இருப்பதன் மூலமாக ஒன்றிய அரசு இந்த நிதிநிலை அறிக்கையை முன்வைத்து நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தின் மேல் மாபெரும் தாக்குதலை நடத்தியிருக்கிறது என்பது புலனாகிறது.
தற்போது தாக்கல் செய்யப்பட்டு இருக்கிற நிதிநிலை அறிக்கையானது நாட்டின் வளர்ச்சிக்காக இல்லாமல், மத்தியிலே ஆண்டு கொண்டிருக்கின்ற பாஜக ஆளுகிற மாநிலங்களில் அதிகாரத்தைத் தக்க வைப்பதற்கான தந்திர அறிக்கை மட்டுமில்லாமல், இது முழுக்க முழுக்க தேர்தல் நலன்களை முன் வைத்துத் தயாரிக்கப்பட்ட அறிக்கையாகும்.
பெரும்பாலும் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் நகல்போல, இந்த அறிக்கையும் அமைந்திருப்பது ஏமாற்றமளிக்கிறது.
படித்துப் பட்டம் பெற்று வேலைக்காகக் காத்திருக்கிற கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான எந்தப் பயனுள்ள திட்டத்தையும் இந்த நிதிநிலை அறிக்கை முன்வைக்கவில்லை.
பொருளாதாரச் சவால்கள் நிறைந்த எதிர்காலத்திற்கான எந்தப் பயனுள்ள அறிவிப்பும் இல்லாத இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டைப் புறக்கணித்து இருப்பதன் மூலம் இந்த அறிக்கையைக் காகிதங்களால் நிரம்பிய வெற்றுக் குப்பையாகவே கருதுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
