சிரியாவின் தெற்குப் பகுதியில் இரு பிரிவினர் மோதிக்கொண்ட இடத்துக்கு வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்குப் புதிய படையணியினரை அனுப்புவதாக அதிபர் அகமது அல் சாரா தெரிவித்துள்ளார்.
சிரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள சுவேய்தா நகரில் டுரூஸ், பெடூயின் ஆகிய இரு இனத்தினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த மோதலில் அறுநூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறையை ஒடுக்குவதற்கு வந்த சிரிய இராணுவத்தினரும் டுரூஸ் இனத்தவரை ஈவிரக்கமின்றிக் கொன்றதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனால் வன்முறை பாதித்த பகுதிகளில் இருந்து சிரியப் படையினரைத் திரும்பப் பெறக்கோரி அவர்கள் மீது குண்டு வீசித் தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வெள்ளியன்று இஸ்ரேல் – சிரியா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாகத் துருக்கிக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சுவேய்தா நகரில் வன்முறை பாதித்த பகுதிகளில் மீண்டும் மோதல் ஏற்படுவதைத் தடுக்கப் புதிய படையணியினரை அனுப்புவதாக சிரிய அதிபர் அகமது அல் சாரா தெரிவித்துள்ளார்.
இதனிடையே வன்முறை பாதித்த சுவேய்தா நகரில் எங்குப் பார்த்தாலும் இரத்தம் சிந்திக் கிடப்பதாகவும், மோதலில் கொல்லப்பட்டோரின் உடல்கள் அகற்றப்படாமல் தெருவில் கிடப்பதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.


