
கடலூர் மாவட்டம் கொடுக்கன்பாளையத்தில் பொதுமக்களின் வீடுகளையும், காடுகளையும் அழித்து விட்டுத் தான் தொழிற்சாலை கட்ட வேண்டுமா? என்று பாமக தலைவர் அன்புமணி வினவியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொடுக்கன்பாளையத்தில் குடியிருப்புகளையும், முந்திரி மரங்களையும் அகற்றியதைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியிருப்பதைக் கண்டித்துள்ளார்.
முந்திரி மரங்கள் பிடுங்கப்பட்ட நிலங்களைக் காலணித் தொழிற்சாலைக்கு அரசு ஒதுக்கியுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அன்புமணி, இதை எதிர்த்து மக்கள் தொடுத்துள்ள வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொடுக்கன்பாளையத்தில் காலணித் தொழிற்சாலை அமைக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும், அங்கே பல தலைமுறைகளாக முந்திரி பயிரிட்டு வரும் மக்களுக்கு நிலங்களைப் பட்டா செய்து வழங்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.


