தமிழகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகத் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை கொட்டித்தீர்த்தது.
சென்னை முதல் நெல்லை வரை அனேக மாவட்டங்களில் மழை பெய்தது. நேற்று தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதேபோல் திருச்சி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை கொட்டித்தீர்த்தது.
திருச்சியில் நேற்று கனமழை பெய்த நிலையில், இன்று மழை தொடர்வதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துக் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விழுப்புரம், தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் எந்தச் சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.