
முக்கியத்துவம் வாய்ந்த ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 29ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழ்வது திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக விஷேச நாட்களில் சொல்லவே வேண்டாம். அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்த ஆடித் கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 29ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆண்டுதோறும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய முருகனின் அறுபடை வீடுகளில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஆடிக் கிருத்திகையும் ஒன்று. இந்த ஆண்டு ஜூலை 29ம் தேதி ஆடிக்கிருத்திகை திருவிழா நடைபெற உள்ளது. அன்றை தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஆடிக்கிருத்திகையை ஒட்டி ஜூலை 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை நாளான அன்றைய தினம் அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு திருள்ளூர் மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.
இந்த விடுமுறையை ஈடும் செய்யும் வகையில் ஆகஸ்ட் 10ம் தேதியான சனிக்கிழமை வேலை நாளாகக் கடைபிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

